'சட்டம் வாழ வாய்ப்பளித்தபோது தூக்கிலிடுவது பாவம்': நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிட புதிய தேதி கோரிய திகார் சிறை மனு தள்ளுபடி

'சட்டம் வாழ வாய்ப்பளித்தபோது தூக்கிலிடுவது பாவம்': நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிட புதிய தேதி கோரிய திகார் சிறை மனு தள்ளுபடி
Updated on
2 min read

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு புதிய தேதிகளை அறிவிக்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி விசாரணை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனையை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசும், டெல்லி அரசும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், நிர்பயா குற்றவாளிகள் ஒரு வாரத்துக்குள் தங்களின் சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கெடு விதித்தது.

இதற்கிடையே திகார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கு புதிய தேதியை அறிவிக்கக் கோரி தெரிவித்திருந்தனர். மேலும் அதில், "குற்றவாளிகளில் 3 பேருக்கு அனைத்துவிதமான சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டன.

கடைசி நபரான பவன் குப்தாவுக்கு மட்டும் கருணை மனு தாக்கல் செய்யும் வாய்ப்பு மட்டும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு வாரத்துக்குள் குற்றவாளிகள் தங்களின் சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அந்த கெடு 5-ம் தேதியோடு முடிந்துவிட்டது. ஆதலால், குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கு புதிய தேதியை அறிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி தர்மேந்திரா ராணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தர்மேந்திரா ராணா கூறுகையில், "சட்டம் வாழ்வதற்கு வாய்ப்பளித்துள்ள நிலையில் குற்றவாளிகளைத் தூக்கிலிடுவது என்பது பாவமானது. நீதியின் நலனுக்காக, குற்றவாளிகள் ஒரு வாரத்துக்குள் சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தக் கோரி டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

ஊகத்தின் அடிப்படையிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும் குற்றவாளிகளுக்கு டெத் வாரண்ட் பிறப்பிக்க முடியாது. ஆதலால் உங்கள் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன். முறையான விண்ணப்பத்துடன் தகுதியான நேரத்தில் அரசு அணுக சுதந்திரம் உண்டு" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in