

ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பதைப் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் இணையதளச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொருளாதார நிலை தொடர்ந்து சரிந்து வருவதைத் தொடர்ந்து, ஈரானின் முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்த போராட்டக்காரர்கள் மீண்டும் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணையதளச் சேவைகளை முடக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இது தொடர்பாக ஈரான் அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை.
ஈரானில் சில வாரங்களுக்கு முன்னர் எரிவாயுப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது. இதில் போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் எண்ணிக்கை 200 ஆக இருக்கலாம் என்று ஆம்னெஸ்டி போன்ற தன்னார்வ அமைப்புகள் தெரிவித்தன.
அமெரிக்கா ஈரான் மீது தொடர்ந்து விதிக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, விலைவாசி உயர்வு மற்றும் மோசமான பொருளாதார நிலையை ஈரானும் அதன் மக்களும் எதிர் கொண்டுள்ளன. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போராட்டங்களைக் கட்டுப்படுத்த ஈரான் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.