

ஈரான் எரிவாயுப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில், இதுவரை நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகி இருப்பதாக சர்வதேச தன்னார்வ அமைப்பான ஆம்னெஸ்டி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லண்டனை மையமாகக் கொண்டு செயல்படும் ஆம்னெஸ்டி தரப்பில், “ ஈரானில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஈரான் பாதுகாப்புப் படைகள் அதிகப்படியான சக்தியை போராட்டக்காரர்கள் மீது பயன்படுத்தியுள்ளனர்.
எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஈரானில் போராட்டம் நடந்த 21 நகரங்களில் சுமார் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். ஆனால், உண்மையில் பலியானவர்கள் எண்ணிக்கை 200 ஆக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளது.
ஈரானில் நடைபெற்ற போராட்டத்தில் பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கையை ஈரான் அரசு இதுவரை வெளியிடவில்லை.
ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை 50 சதவீதம் கடந்த வாரம் உயர்த்தப்பட்டது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஈரான் அரசின் இந்த முடிவை ஈரான் மதத் தலைவர் அயத்தெல்லா காமெனி ஆதரவு தெரிவித்தார்.
எரிபொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து ஈரான் மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராட்டத்தில் இறங்கினர். இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வன்முறை நீடிக்கிறது.