

வாஷிங்டன்
சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) இந்தியப் பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து மதிப்பிட்டாலும், உலக அளவில் வேகமாக பொருளாதார வளர்ச்சி உள்ள நாடுகளில் இந்தியாவும் இருக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த இரு நாட்களுக்கு முன் சர்வதேச நிதியம் வெளியிட்ட பொருளாதார கருத்துக்கணிப்பில் இந்தியாவின் நடப்பு பொருளாதார வளர்ச்சியை 7.3 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமாகக் குறைத்துக் கணித்திருந்தது.
ஆனால், கடந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது. மத்திய அரசு எடுத்துவரும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளினால், 2020-ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக அதிகரிக்கும் என ஐஎம்எப் தெரிவித்திருந்தது.
ஐஎம்எப் மற்றும் உலக வங்கியின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாஷிங்டனில் இந்திய ஊடகத்தினருக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் ஐஎம்எப் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறைத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில், "ஐஎம்எப் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதத்தைக் குறைத்து கணித்து இருப்பது இருக்கட்டும். ஆனால், வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்டிருக்கும் நாடுகளில் இன்னும் இந்தியா இருந்து வருகிறது. சீனாவின் பொருளாதாரத்தோடு இந்தியாவை ஒப்பிடுவதில் எந்தச் சிக்கலும் இல்லை.
ஏனென்றால், ஐஎம்எப் கணிப்பின்படி இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் நடப்பு ஆண்டில் 6.1 சதவீதமாகவே இருக்கிறது. ஐஎம்எப் அமைப்பின் சமீபத்திய கணிப்பில் உலக அளவில் உள்ள நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து கணிப்பு வெளியிட்டது. அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் குறைந்திருக்கிறது.
இருந்தபோதிலும், இந்தியா இன்னும் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்டுள்ள நாடாகவே இருக்கிறது என்ற முக்கியமான விஷயத்தை மறந்துவிடக்கூடாது. இன்னும் இந்தியாவின் பொருளாதாரம் வளர வேண்டும், இன்னும் வேகமாக வளரவேண்டும் என்பது எனது விருப்பம். அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
உண்மை நிலவரத்தைப் பொறுத்தவரை, வேகமான பொருளாதார வளர்ச்சி உள்ள நாடுகளில் இந்தியாவும் தொடர்ந்து இருந்து வருகிறது. உலக அளவில் மோசமான சூழலிலும் இந்தியா தொடர்ந்து வேகமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
இப்போதுள்ள சூழலில் நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையினரும் கூறும் குறைகளைக் காதுகொடுத்து பொறுமையாகக் கேட்பதும், அதன்பின் அவர்களின் குறைகள், தேவைகள் நிறைவேற்றப்பட்டதா என்று பார்ப்பதுதான். இப்போதுள்ள சூழலில் அலசி ஆராய்வதற்கு நான் நேரம் செலவிடவில்லை" என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறைந்ததற்குப் பொருளாதார சுழற்சி வேகம் குறைந்தது காரணமாக அல்லது கட்டமைப்பில் பிரச்சினையா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில், "பொருளாதார சுழற்சியிலோ அல்லது கட்டமைப்பிலோ பிரச்சினை இருக்கலாம். இரண்டிலும் கூட இருக்கலாம் அல்லது இரு காரணிகளில் ஏதாவது ஒன்று இருக்கலாம். இந்த சூழலில் இதற்குள் நான் செல்லவில்லை. சொகுசாக அமர்ந்துகொண்டு, என்ன நடக்கிறது, எப்படி பொருளாதாரம் செல்கிறது எனப் பார்க்கவும் இல்லை.
என்னைப் பொறுத்தவரை மக்கள் என்னிடம் என்ன கேட்கிறார்கள், எதிர்பார்க்கிறார்கள், அவர்களுக்கு முடிந்தவரை வேகமாக என்ன செய்யலாம் என்பதற்குத்தான் நேரம் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை மத்திய அரசு கடைப்பிடிக்குமா என்ற நிருபர்கள் கேட்டனர். அதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில், "நிதிப் பற்றாக்குறை குறித்து இன்னும் ஆய்வு செய்யவில்லை. இந்த நேரத்தில் அவை என்னைக் கவலைப்பட அனுமதிக்கவில்லை. தொழில்துறையில் இருக்கும் பிரச்சினைகளைக் களைவதற்குத்தான் அதிகமான முக்கியத்துவம் அளித்து வருகிறேன்" எனத் தெரிவித்தார்.
பிடிஐ