

கிரீஸ் நாடு சமர்ப்பித்த பொருளாதார சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டு, அந்நாட்டுக்கு மேலும் கடனுதவி வழங்க ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டோனல்ட் டஸ்க் இது குறித்து தனது ட்விட்டரில், “யூரோ உச்சி மாநாட்டில் ஒருமனதாக உடன்பாடு எட்டியுள்ளது. சீரிய பொருளாதார சீர்திருத்தங்களுடன் நிதி ஆதாரம் அளிக்க உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது” என்றார்.
ஐ.எம்.எப், ஐரோப்பிய மைய வங்கி உட்பட ஐரோப்பிய நாடுகளிடம் கடன்பட்டுள்ள கிரீஸ் தனது கடனை அடைக்க முடியாத நிலையில் பொருளாதார சீர்கேட்டைச் சந்தித்தது. ஏற்கெனவே கொடுத்த கடனை கிரீஸ் திருப்பி அளிக்க முடியாத நிலையில், மேலும் கடன் கொடுப்பது சரியாகாது என்றும் யூரோ நாணயத்தை கிரீஸ் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் தேவைப்பட்டால் ஐரோப்பிய யூனியனிலிருந்தே கிரீஸை வெளியேற்றவும் ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டிருந்தன.
இந்நிலையில், கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ், வரி உயர்வு, ஓய்வு பெறும் வயதை அதிகப்படுத்துதல், மானியங்களை அகற்றுதல் உள்ளிட்ட பொருளாதார மாற்றங்கள் அடங்கிய முன்மொழிவை ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பரிசீலனைக்கு சமர்ப்பித்திருந்தார்.
அந்த பரிசீலனைகளை ஐரோப்பிய யூனியன் நாடுகளும் யூரோ நாணயத்தை பயன்படுத்தும் நாடுகளும் தற்போது ஏற்றுக் கொண்டு கிரீஸுக்கு மேலும் கடன் வழங்க முடிவெடுத்துள்ளன.
ஆனாலும் ஏற்கெனவே வழங்கப்பட்ட கடன்களில் எதுவும் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்றும் கிரீஸுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சில மணி நேரங்களில் கிரீஸ் தனது நாடாளுமன்றத்தைக் கூட்டி புதிய சீர்திருத்தங்களை அமல்படுத்தியாக வேண்டும்.
பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹாலண்டே, கிரீஸ் “நம் நாகரீகத்தின் இருதயம்” என்றார்.
இறுதி வரை போராடினோம்: சிப்ராஸ்
கிரீஸ் நாட்டை அதன் மீளமுடியா சுமையிலிருந்து மீட்க இறுதி வரை போராடினோம் என்று அந்த நாட்டு பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் கூறினார். "தார்மீக அடிப்படையிலான போராட்டத்தை இறுதிப்பயன் வரை நடத்தினோம். கிரேக்க மக்களின் பெரும்பான்மையோர் இந்த முயற்சியை பாராட்டுவார்கள் என்றே நம்புகிறேன்" என்றார்.
17 மணி நேர கடுமையான விவாதங்கள், பேச்சு வார்த்தைகள், வாக்குறுதிகளுக்குப் பிறகு கிரீஸ் நாடு கடனுதவி பெறும் பயனை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.