

பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து நேற்று கஜகஸ்தான் நாட்டுக்குச் சென்றார்.பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற் காக மோடி இன்று ரஷ்யா செல்கிறார்.
ரஷ்யா, மத்திய ஆசிய நாடுகளில் பிரதமர் மோடி 8 நாட்கள் சுற்றுப் பயணத்தை நேற்றுமுன்தினம் தொடங்கினார். முதல்கட்டமாக அவர் உஸ்பெகிஸ்தான் சென்றார். அங்கு அந்த நாட்டு அதிபர் இஸ்லாம் கரிமூவ்வை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாட்டு வர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் இந்தியர் கள் மத்தியில் மோடி பேசியதாவது:
எந்தவொரு நாட்டின் பொருளா தாரம் வலுவாக இருக்கிறதோ அந்த நாட்டின் மொழியை கற்றுக் கொள்வதில் உலக மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகை யில் இந்திய பொருளாதாரம் வேக மாக வளர்ந்து வருகிறது. அதனோடு இணைந்து இந்தி மொழியும் அதிவேகமாக வளர்கிறது.
இந்த நேரத்தில் உஸ்பெகிஸ் தான்-இந்தி அகராதியை வெளி யிடுவதில் பெருமகிழ்ச்சி அடை கிறேன். உஸ்பெகிஸ்தான் ரேடியோ வின் இந்தி ஒலிபரப்பு 50 ஆண்டு களைத் தாண்டியிருப்பது மிகப் பெரிய சாதனையாகும். இங்கு இந்தி மொழி திரைப்படங்கள், இசை மிகவும் பிரபலமாக இருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.
உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமூவ் என்னிடம் பேசிய போது, இளைஞர்கள் தீவிரவாத பாதையில் இருந்து விலக இசை அருமருந்தாக உள்ளது என்று தெரிவித்தார். அவரது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். இரு நாட்டு மக்களிடையே நட்புறவை மேலும் வளர்க்க வேண்டும், மொழி, கலாச்சார உறவை மேம் படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இரண்டாம் நாளான நேற்று அவர் தாஷ்கண்டில் உள்ள இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் மரி யாதை செலுத்தினார். இதுகுறித்து மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இந்தியாவின் பெருமைமிகு புதல்வன் `லால் பகதூர் சாஸ்திரி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உஸ்பெகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி நேற்று கஜகஸ்தான் தலைநகர் அஸ்தனாவுக்கு சென்றார். அந்த நாட்டு பிரதமர் கரீம் மாஸிமோவ் விமான நிலையத்துக்கு நேரில் வந்து அவரை வரவேற்றார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மத்திய ஆசியாவில் இந்தியாவின் மிக நெருங்கிய நட்புநாடு கஜகஸ்தான், இங்கு பயணம் மேற்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன், பிரதமர் கரீம் விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றதற்கு அவருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
இன்று பிரிக்ஸ் மாநாடு
ரஷ்யாவின் உஃபா நகரில் பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்கு கிறது. அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். மூன்று நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி கஜகஸ்தானில் இருந்து இன்று உஃபா செல்கிறார்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கியின் செயல்பாடுகள் குறித்து மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக உள்ளூர் பணத்தி லேயே அந்தந்த நாடுகளுக்கு கடன் வழங்குவது குறித்து ஆலோசிக்கப் படும் என்று தெரிகிறது. இந்த வங்கியின் முதல் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த கே.வி. காமத் நியமிக்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.
ரஷ்யாவின் உஃபா நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை அவர் சந்தித்துப் பேசுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஷ்ய பயணத்தை நிறைவு செய்த பிறகு வரும் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை துர்க்மினிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்கிறார்.