

உளவு பார்க்கும் பணிகளுக்கு தடுப்பூசி திட்டங்களை சி.ஐ.ஏ. இனி பயன்படுத்தாது என அமெரிக்க பொது சுகாதார அதிகாரிகளிடம் வெள்ளை மாளிகை உயரதிகாரி ஒருவர் உறுதி அளித்தார்.
2011-ல் பாகிஸ்தானில் பின் லேடன் பதுங்கியிருப்பதாக நம்பப்பட்ட அப்போட்டாபாத் நகரில் பாகிஸ்தான் டாக்டர் ஷகில் அப்ரிதி என்பவரை சிஐஏ தனது உளவுப் பணிக்கு பயன்படுத்தியது. அவரிடம் போலியோ சொட்டு மருந்து தரப்பட்டு, அதை வீடுகள் தோறும் விநியோகிக்குமாறு கூறப்பட்டது. இதன் மூலம் அவர் உளவுத் தகவல்களை சேகரித்து வந்தார்.
மேலும் குழந்தைகளின் மரபணு மாதிரிகளையும் அவர் திரட்டி வந்தார். பின்லேடன் அங்கு பதுங்கியிருப்பதை உறுதி செய்துகொள்ள இப்பணி உதவியாக இருந்தது.
அமெரிக்காவிலும் இதுபோன்ற சுகாதார திட்டங்களை பயன்படுத்தி சி.ஐ.ஏ. உளவு பார்த்து வருகிறது.
இந்நிலையில் உளவுப் பணிகளுக்கு தடுப்பூசி திட்டம் போன்ற சுகாதார திட்டங்களை சி.ஐ.ஏ இனி பயன்படுத்தாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின், ‘பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை’ ஆலோசகர் லிசா மொனாக்கோ, 13 பொது சுகாதார நிலைய அதிகாரிகளுக்கு கடந்த வாரம் எழுதிய கடிதத்தில், “உளவுப் பணிகளுக்கு தடுப்பூசி திட்டங்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தப்படுவதை கைவிட சி.ஐ.ஏ. ஒப்புக்கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சி.ஐ.ஏ. உளவாளியாக இருந்த அப்ரிதிக்கு பாகிஸ்தானிய நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. பின்னர் இந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, மறு விசாரணை நடைபெற்று வருகிறது.