

மெக்ஸிகோவைச் சேர்ந்த கலைஞர் கிறிஸ்டியம் ராமோஸ். பாடம் செய்யப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளில் உலகப் புகழ் பெற்ற ஓவியங்களைத் தீட்டி வருகிறார். ஒரு பக்க இறக்கையில் வரைந்து முடிப்பதற்கே 56 மணி நேரங்கள் ஆகிவிடும். அதிக உழைப்பையும் பொறுமையையும் கோரும் ஓவியங்கள் இவை. உருப்பெருக்கும் கண்ணாடியை வைத்துக்கொண்டு, ஓவியங்களை உருவாக்கி வருகிறார் ராமோஸ். ’’சின்ன வயதிலேயே வண்ணத்துப்பூச்சிகளின் அழகும் வண்ணங்களும் என்னை ஈர்க்க ஆரம்பித்துவிட்டன. வளர்ந்த பிறகு வண்ணத்துப்பூச்சிகளிலேயே ஓவியங்களைத் தீட்டுவேன் என்று நான் நினைத்ததில்லை. என்னுடைய விசிறிகள் பாடம் செய்யப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளை அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள். உலகிலேயே வண்ணத்துப்பூச்சிகளின் மீது ஓவியம் வரையும் ஒரே கலைஞன் நான்தான். இதற்காக ஏராளமான விருதுகள் வாங்கியிருக்கிறேன். உலக சாதனைகளின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறேன்’’ என்கிறார் ராமோஸ்.
வண்ணத்துப்பூச்சியே அழகான ஓவியம்தான்! அதற்குள் இன்னொரு ஓவியமா!
பனாமா நாட்டின் பனாமா நகரில் சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி வருகின்றனர். தரம் மிக்க சாலைகளை உருவாக்குவதற்காக ஒரு கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். வண்டி ஓட்டிகள் சாலைகளில் குழிகளைக் கண்டவுடன் அந்தக் கருவியை அங்கே வைத்துவிட வேண்டும். அந்த வழியே செல்லும் வாகனங்கள் கருவியின் மீது ஒவ்வொரு முறை ஏறும்போதும் செய்தி ட்விட்டர் கணக்கில் பதிவாகிவிடும். ட்வீட்களைப் படிக்கும் அரசாங்க அதிகாரிகள், குறிப்பிட்ட இடத்துக்கு ஆட்களை அனுப்பி சாலையை உடனடியாகச் சரி செய்துவிடுகின்றனர். லத்தீன் அமெரிக்காவின் துபாய் என்று அழைக்கும் விதத்தில் பொருளாதாரத்திலும் நகர அமைப்பிலும் முன்னேற்றங்களைக் கொண்டு வரும் திட்டத்தில் இறங்கியிருக்கிறது பனாமா. ட்விட்டர் மூலம் சாலைகளைச் செப்பனிடும் பணிக்கு மக்களிடம் ஏராளமான வரவேற்பு இருக்கிறது.
ஆஹா! தமிழ்நாட்டுக்கு இதைக் கொண்டுவந்தால் நல்லா இருக்குமே!
பிரிட்டனைச் சேர்ந்த 28 வயது பீட்டர் போகர் முன்னாள் ராணுவ வீரர். ஆப்கானிஸ்தான் சண்டையில் அவரது வலது காலை இழந்துவிட்டார். ’’முதலில் அதிர்ச்சியாக இருந்தது. என்னை விட மோசமான பாதிப்புகளை உடைய மனிதர்களைப் பார்த்ததும் என் இழப்பு பெரியதாகத் தோன்றவில்லை. அட்லாண்டிக் தீவுகளில் மூன்று ஆண்டுகள் தங்கி, என்னைத் தேற்றிக்கொண்டேன். அங்குதான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. க்ரீன்லாந்து பனிப்பிரதேசங்களில் பயணம் செய்யும் சாகசக் குழுவுடன் சேர்ந்துகொண்டேன்’’ என்கிறார் பீட்டர். மோசமான வானிலை, நடப்பது கடினம் என்ற எச்சரிக்கைகளைக் கண்டு பயப்படாமல் கிளம்பிய பீட்டர், உறைந்த பனிப்பகுதிகளில் 372 மைல்கள் நடந்து, குறிப்பிட்ட இலக்கை அடைந்தார். உலகிலேயே இந்தச் சாதனை செய்த முதல் மாற்றுத்திறனாளி பீட்டர்தான்! குழந்தைகளின் கல்வி, அறக்கட்டளைகளுக்கு நிதி திரட்டிக் கொடுக்கும் காரணங்களும் இந்தப் பயணத்தின் பின்னால் இருக்கின்றன.
ரியல் ஹீரோ!
சீனாவில் வசிக்கும் 31 வயது லியான், பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். தொலைபேசி நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு தன்னுடைய குடியிருப்புக்குச் சென்றார். அங்கே 77 வயது மூதாட்டி ஒருவர் இருந்தார். அவரைக் கண்டவுடன் யார், என்ன என்று விசாரிக்காமல் தாக்க ஆரம்பித்துவிட்டார். அந்த மூதாட்டி எவ்வளவோ சொல்லியும் கூட தாக்குதலை நிறுத்தவில்லை. மயங்கிச் சரிந்தார் அந்த மூதாட்டி. அருகில் உள்ளவர்கள் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். மூதாட்டியை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது. லியானைக் கைது செய்து விசாரித்தபோது, அவருடைய வீட்டுக்குள் யாரோ திருட வந்துவிட்டார்கள் என்று நினைத்து அடித்ததாகச் சொன்னார். உண்மையில் வீடு மாறி சென்றது லியான்தான். விசாரணை நடைபெற்று வருகிறது.
குடிபோதையில் அநியாயமா ஓர் உயிர் போயிருச்சே…