

லண்டன்: ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது தொடர்பாக பிரிட்டன் தலைமையில் 40 நாடுகள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தின. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது.
இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் முழுமையாக மூடியிருக்கிறது. இதனால் சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி முடங்கியிருக்கிறது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள், எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது தொடர்பாக பிரிட்டன் தலைமையில் 40 நாடுகளின் பிரதிநிதிகள் நேற்று காணொலி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினர். பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் யெவெட் கூப்பர் கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள், பிரதிநிதிகள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்றனர். இக்கூட்டத்தை அமெரிக்கா புறக்கணித்தது. அப்போது பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறும்போது, “ராணுவ நடவடிக்கை இல்லாமல் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ராஜ்ஜிய ரீதியிலான முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். இதற்கு சாத்தியமுள்ள அனைத்து வழிகளையும் ஆராய்வோம்” என்று தெரிவித்தார்.
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் இணைய ஐரோப்பிய நாடுகள் மறுத்துவிட்டன. இதனால் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள், எரிவாயு வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் கடந்த 2022-ம் ஆண்டில் நிறுத்திவிட்டன.
தற்போது நார்வே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஐரோப்பாவின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. எனினும் போலந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தங்களின் எரிபொருள் தேவைக்கு வளைகுடா நாடுகளை நம்பி உள்ளன.
இந்தியா பங்கேற்பு
இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பிரிட்டிஷ் அரசு சார்பில் இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையேற்று இந்திய வெளியுறவுச் செயலாளர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார்" என்று தெரிவித்தார். இதன்படி டெல்லியில் இருந்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி காணொலி வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்டார். மத்திய கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.