எழும்பூர் தொகுதியில் ஏற்றம் பெறும் கட்சி எது?
சென்னை மாநகரின் மையப் பகுதியாக விளங்குகிறது எழும்பூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி. தமிழக சட்டப்பேரவை தொகுதி வரிசையில் 16-வது இடத்தில் உள்ள இந்த தொகுதியில், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், அரசு அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம், எழும்பூர் நீதிமன்றம், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, புதுப்பேட்டை, கங்காதீஸ்வரர் கோயில், பள்ளிக்கல்வி அலுவலக வளாகம் (டிபிஐ) போன்ற சென்னை மாநகரின் முக்கிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த தொகுதி 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மறுசீரமைப்புக்கு பின்பு அண்ணாநகர் மற்றும் பூங்காநகர், புரசைவாக்கம் (நீக்கப்பட்டது) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் இருந்து சில பகுதிகள் எழும்பூருடன் இணைக்கப்பட்டன.
இந்த தொகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களே அதிகளவில் வசிக்கின்றனர். அதேபோல், நாயுடு, வன்னியர், யாதவர், முதலியார் உட்பட இதர சமூகத்தினரும் கணிசமாக உள்ளனர். ஒருசில பகுதிகளில் மட்டும் பிராமணர், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
அதனுடன் வேப்பேரி, பெரியமேடு பகுதிகளில் வடமாநிலத்தவர்கள் அதிகம் உள்ளனர். மற்றொரு முக்கிய இடமான புதுப்பேட்டை மோட்டார் வாகன உதிரி பாகங்களின் மையமாகத் திகழ்கிறது.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள் இந்த தொகுதியில் போக்குவரத்து நெரிசல், ஆக்கிரமிப்புகள், சாலைகளில் கழிவுநீர் வெளியேறுதல் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. மேலும், சில பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடும் நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
எழும்பூர் தொகுதியில் இதுவரை 15 முறை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 11 முறை திமுகவும், 2 முறை காங்கிரசும், தேமுதிக மற்றும் சுயேட்சை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிகபட்சமாக திமுகவைச் சேர்ந்த பரிதி இளம்வழுதி 5 முறை இந்த தொகுதியில் வெற்றி வாகை சூடியுள்ளார்.
திமுகவுக்கு சாதகமான இந்த தொகுதியில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதியை, அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 202 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பரபரப்பாகப் பேசப்பட்டது.
வேட்பாளர்கள் பின்புலம்
இத்தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ.வாக திமுகவைச் சேர்ந்த இ.பரந்தாமன் இருக்கிறார். இவர் 2021 தேர்தலில் அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட தமிழர் மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியனை 38,768 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இம்முறை எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் தமிழன் பிரசன்னா போட்டியிடுகிறார்.
இவர் திமுகவின் முக்கிய இளம் முகங்களில் ஒருவராகவும், செய்தித்தொடர்பு இணைச் செயலாளராகவும் உள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் திமுகவின் குரலாக ஒலிக்கும் இவர், சமூக வலைதளங்களிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். தற்போது இத்தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங் கப்பட்டுள்ளது.
அதேபோல், அதிமுக சார்பில் அபிஷேக் ரங்கசாமி போட்டியிடுகிறார். இவர் தென்சென்னை வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளராக இருக்கிறார். தொகுதிக்கு பெரிதாக பரிட்சயம் இல்லாதது இவருக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
தவெக சார்பில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் சரண்யா ஆகியோரும் களமிறங்குகின்றனர். கள நிலவரத்தின்படி நான்குமுனைப் போட்டியாக இருந்தாலும் அதிமுக, திமுக இடையேதான் இங்கு கடும் போட்டி நிலவுகிறது.
இந்த தொகுதியில் அதிகம் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களே வெற்றியை தீர்மானிப்பவர்களாக உள்ளனர். அதில் கணிசமான வாக்குகளை தவெக பிரிக்கும். மேலும், தவெக-வுக்கு தொகுதி முழுவதும் பரவலாக ஆதரவு இருப்பதையும் காணமுடிகிறது. இதனால் இம்முறை வெற்றி வாய்ப்பு திமுகவுக்கு எளிதாக இருக்காது என்று கூறப்படுகிறது.
வாக்காளர்கள் விவரம்
ஆண்கள் - 65,677
பெண்கள் - 69,149
3-ம் பாலினத்தவர் - 53
மொத்த வாக்காளர்கள் - 1,34,879