

ரஷ்ய கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் சிரியாவில் கடந்த 2 மாதங்களில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து சிரிய மனித உரிமை ஆணையம் தரப்பில், ”சிரியாவில் வடக்குப் பகுதியில் உள்ள ஹமா மாகாணத்தில் கடந்த இரண்டு மாதங்களில் ரஷ்யப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 544 பொதுமக்கள் பலியாகினர். இதில் 130 பேர் குழந்தைகள். இந்தத் தாக்குதலில் 2,177 பேர் காயமடைந்துள்ளனர்.
சிரிய மனித உரிமை ஆணையத் தலைவர் அப்துல் கானி இதுகுறித்து கூறும்போது, ”ரஷ்யாவும், சிரியப் படையும் வேண்டுமென்றே பொதுமக்களைத் தாக்குகின்றன” என்று தெரிவித்தார்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச்சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.