அமைதிப் பேச்சுக்கு தயார்: வடகொரியாவுக்கு தென்கொரியா அழைப்பு

அமைதிப் பேச்சுக்கு தயார்: வடகொரியாவுக்கு தென்கொரியா அழைப்பு
Updated on
1 min read

போர் பதற்றத்தை தணிக்க வடகொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று தென்கொரியா அழைப்பு விடுத்துள்ளது.

ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையை மீறி வடகொரியா அடுத்தடுத்து அணுகுண்டு சோதனைகளையும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. அண்மையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஐ.நா. சபையும் அமெரிக்காவும் அந்த நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. வடகொரியாவின் அச்சுறுத்தலைச் சமாளிக்க அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து தொடர்ந்து போர் பயிற்சிகளையும் நடத்தி வருகின்றன.

இந்தப் பின்னணியில் தென்கொரிய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சூ சூ சக் தலைநகர் சியோலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க தென்கொரிய பாதுகாப்புத் துறை மூத்தஅதிகாரிகள் வடகொரியாவுக்கு முறைப்படி அழைப்பு அனுப்பியுள்ளனர் என்று தெரிவித்தார்.

தென்கொரியாவுக்கான செஞ்சிலுவைச் சங்க தலைவர் கிம் சன் யாங் கூறியபோது, கொரிய போரில் பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைப்பது தொடர்பாக வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். தென்கொரியாவின் புதிய அதிபராக கடந்த மே மாதம் பதவியேற்ற மூன் ஜே-இன், போர் பதற்றத்தை தணிக்க ராஜ்ஜிய ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை நேரடியாகச் சந்தித்துப் பேச தயார் என்று அவர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

அதன்படி தற்போது அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடகொரியாவுக்கு தென்கொரியா பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் வடகொரியா தரப்பில் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in