

சிட்னி: நெடுந்தூரம் நிற்காமல் செல்லக்கூடிய வான்வழிப் பயண வரலாற்றில், ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் நிறுவனத்தின் ‘புரொஜெக்ட் சன்ரைஸ்’ திட்டத்தின் சோதனை ஓட்டத்தை ஏர்பஸ் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்த நீண்ட பயணத்துக்கான விமானங்களை குவாண்டாஸ் நிறுவனத்துக்கு ஏர்பஸ் நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது.
அந்த வகையில், கடந்த பத்தாண்டுகளாகத் திட்டமிடப்பட்டு வந்த இந்த திட்டம் இப்போது முக்கிய இலக்கை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கனவிலிருந்து நனவாக மாறத் தொடங்கியுள்ள இந்த விமான சேவை திட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களுக்குப் பயணிகள் இனி இடையில் எங்கும் நிற்காமல் நேரடியாகப் பயணம் செய்ய முடியும்.
இந்தக் கனவு நனவாவதற்காக ஏர்பஸ் நிறுவனம், இதற்கென பிரத்யேகமாக வடிவமைத்த ‘ஏ350-1000யுஎல்ஆர்’ ரக விமானம் தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தற்போது நியூயார்க்கின் ஜே.எஃப்.கே விமான நிலையத்திலிருந்து சீனாவின் ஃபுஸோவ் நகருக்கு ஜியாமென் ஏர் நிறுவனம், 19 மணி நேரம் 20 நிமிட இடை நில்லா விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த உலக சாதனையை முறியடிக்கும் வகையில் தற்போது ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமான சேவை (22 மணி நேர இடை நில்லா விமான பயணம்) அமைய உள்ளது.
நெடுந்தூர வான்வழிப் பயணத்தில் புதிய மைல்கல்லாக அமையவுள்ள சோதனை பிரான்ஸ் நாட்டின் டூலூஸ்-பிளாக்னாக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட முதல் ‘ஏ350-1000யுஎல்ஆர்’ விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளதாக ஏர்பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்பஸ் நிறுவனத்தின் பிரத்யேகப் பரிசோதனைக் குழுவினரால் இயக்கப்பட்ட இந்த விமானம், வான்வெளியில் 3 மணி நேரம் 43 நிமிடங்கள் பறந்து, 41,000 அடி உயரத்தை எட்டியது.