

தீவிரவாதத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தானியர் ஒருவரின் குடியுரிமையைப் பறிப்பதற்கான நடைமுறையை அமெரிக்க நிர்வாகம் தொடங்கியுள்ளது.
அவர் தற்போது பயங்கரவாதக் குற்றச்சாட்டில் 20 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இமான் ஃபாரிஸ் என்ற இந்த நபர் 1999-ம் ஆண்டு அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். ஆனால் 2003-ம் ஆண்டு அல்குவைதா அமைப்புக்குப் பொருளுதவி செய்ததான சதி வழக்கில் 20 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார்.
இவர் 1980-களில் காஷ்மீரில் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததை தனது குடியுரிமை விண்ணப்பத்தில் தெரிவிக்காமல் மறைத்து விட்டார் என்றும் இவர் ஹர்கத் உல் ஜிஹாதி அல் இஸ்லாமி இயக்கத்துடன் தொடர்புடையவர் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவரது குடியுரிமையைப் பறிக்க வேண்டும் என்று நீதித்துறை சிகாகோ நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.
ட்ரம்ப் அதிபரான பிறகு குடியுரிமை பெற்ற அயல்நாட்டவர் ஒருவரின் குடியுரிமையைப் பறிப்பது என்பது முதல் முறையாக நடைபெறுகிறது. ஃபாரிஸ் என்ற இந்த நபர் வேறொருவர் பாஸ்போர்ட்டை மோசடியாகப் பயன்படுத்தியதோடு குடியேற்ற பயன்களுக்கான மற்ற விண்ணப்பங்களையும் முறைகேடாகப் பயன்படுத்தியது தெரியவந்தது.
எனவே ஃபாரிசின் குடியுரிமை பறிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் தண்டனை முடிந்த பிறகு இவர் பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்படுவார்.
ஃபாரிஸ் என்ற இந்த நபர் 1969-ம் ஆண்டு கராச்சியில் பிறந்தவர். 1994-ம் ஆண்டு இன்னொருவர் பாஸ்போர்ட், விசாவைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்குள் நுழைந்தார். 4 மாதங்களுக்குப் பிறகு புகலிடம் கேட்டு விண்ணப்பித்தார். அதில் பொய் கூறியுள்ளார் என்று வழக்கறிஞர்கள் கோர்ட்டில் தெரிவித்தனர்.
அமெரிக்க குடியுரிமை பெற்ற பிறகு ஃபாரிஸ் என்ற இந்த நபர் பாகிஸ்தானுக்கும் ஆப்கானுக்கும் 2000-த்தில் பயணம் மேற்கொண்டு ஆப்கானில் பின்லேடனை சந்திக்க முயற்சி செய்துள்ளார். எடைகுறைந்த நவீன விமானம் குறித்து அல்குவைதா இவரிடம் தகவல் கேட்க இவர் அது பற்றி ஆராய்ந்து தகவல்களை அல்குவைதாவுக்கு அளித்துள்ளார் என்று வழக்கறிஞர்கள் கடும் குற்றச்சாட்டை முன் வைத்தனர். 2002-ல் மீண்டும் அல்குவைதா தலைவர்களைச் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் இவரது குடியுரிமை பறிக்கப்படலாம் என்று தெரிகிறது.