

சோமாலியா தலைநகர் மொகாடிஷுவில் பிரபல ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 2 எம்.பி.க்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
மொகாடிஷு நகரின் மையப் பகுதியில் ‘சென்ட்ரல் அம்பாசடர்’ என்ற பிரபல ஹோட்டல் உள்ளது. சோமாலிய எம்.பி.க்கள் பெரும் பாலும் இந்த ஹோட்டலில் தங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 5.40 மணிக்கு ஹோட்டல் வளாகத்தில் கார் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 5 தளங் களை கொண்ட ஹோட்டலின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.இதையடுத்து தீவிரவாதிகள் அந்த ஹோட்டலுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
தகவலின் பேரில் அரசுப் படைகள் அங்கு விரைந்து சென்று அப்பகுதியை சுற்றி வளைத்தன. நேற்று முன்தினம் இரவு முழுவதும் இரு தரப்பிலும் மோதல் நடைபெற்றது. இந்நிலையில் தீவிரவாதிகளுடனான மோதல் நேற்று முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் குண்டுவெடிப்பு, தீவிரவாதிகளின் தாக்குதல், அரசுப் படைகளின் பதில் நடவடிக்கை என அடுத்தடுத்த சம்பவங்களில் 2 எம்.பி.க்கள் உட்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 55 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர் களில் பெரும்பாலும் பொதுமக்கள் ஆவர்.
இந்த தாக்குதலுக்கு அல்-காய்தா துணை அமைப்பான அல்-ஷபாப் பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து அல்-ஷபாப் செய்தித் தொடர்பாளர் அபு முசாப் கூறும் போது, “ஹோட்டல் மீதான தாக்கு தலில் நாங்கள் 3 போராளிகளை இழந்தோம். எம்.பி.க்கள், ராணுவ வீரர்கள் உட்பட 30 பேரை கொன் றோம்” என்றார். உயிரிழப்பை அதிகமாக கூறுவது தீவிரவாத அமைப்புகளின் வழக்கம் ஆகும்.
கடந்த 2011-ல் ஆப்பிரிக்க யூனியன் அமைதிப் படையால் மொகாடிஷு நகரில் இருந்து அல்-ஷபாப் தீவிரவாதிகள் விரட்டி யடிக்கப்பட்டனர். என்றாலும் சோமாலியாவுக்கு பெரும் அச்சுறுத் தலாக இவர்கள் இருந்து வருகின்றனர். மேற்கத்திய ஆதரவு அரசை அகற்றும் நோக்கில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.