

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், மசூதி அருகே வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதவிட்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தின் கோஹட் மாவட்டத்தில் காவல் துறையினரின் குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள மசூதியின் அருகே நேற்று பிற்பகல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
மசூதியின் அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை மர்ம ஆசாமிகள் மோதவிட்டு பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் மசூதியில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
தொழுகையின்போது நடத்தப்பட்ட இந்த பயங்கரத் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தத் தாக்குதலால், மசூதி அருகே பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், கூடுதலாக பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதியில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பெறுப்பேற்கவில்லை. மேலும், சமீபகாலமாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட 199 தீவிரவாதத் தாக்குதல்களில் 158 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக் கது.