

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணுமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆகஸ்ட் 25-ல் நடைபெறுவதாக இருந்த செயலர்கள் தரப்பிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்தித்துப் பேசியதாலும், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாலும் பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்தது.
இந்நிலையில், தடைபட்ட பேச்சுவார்த்தையை தொடர வேண்டும், இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை நிலைநாட்ட முயற்சிக்க வேண்டும் என ஐ.நா. அறிவுறுத்தியுள்ளதாக அதன் செய்தித்தொடர்பாளர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள தகவல் தெரிவிக்கின்றது.
இருப்பினும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர ஐ,நா தலைவர் தலையீடு இருக்குமா என்ற கேள்விக்கு அந்த அறிக்கையில் பதில் ஏதும் இல்லை.
ஆகஸ்ட் மாதம் தொடங்கியது முதல் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மொத்தம் 23 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியத் தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதை பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லியும் முடிவு செய்துள்ளார்.