

சிரியாவில் நிகழ்ந்து வரும் உள்நாட்டுப் போர் தொடர்பாக இருதரப்பும் நேரடியாக சனிக் கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களின் கோரிக்கையில் இருதரப்பும் பிடிவாதமாக இருப்பதால், சுமுக முடிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் – அஸாதை ஆட்சியிலிருந்து அகற்றக் கோரி கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
இருதரப்புக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை சார்பில் ஜெனீவா வில் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, சிரியா அரசுத் தரப்பு குழுவினரும், அரசு எதிர்ப்புக் குழுவினரும் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு ஜெனீவா வந்தனர். இருதரப்புக்கும் இடையே தனித்தனியே கருத்துக் கேட்கும் பணியில் ஐ.நா. அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முறைப்படியான பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இருதரப்பினரும் நேரடியாக சந்தித்துப் பேச சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. ஐ.நா. பிரதிநிதி லக்தார் பிரஹிமி இரு தரப்பையும் அமரவைத்து தனது கருத்தை தெரிவித்தார். அரை மணி நேரத்துக்குப் பிறகு, இரு தரப்பினரும் தனித்தனி அறைகளில் அமர வைக்கப்பட்டனர். அவர்களை தனித்தனியே சந்தித்த பிரஹிமி, அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.
அதிபர் அஸாத் பதவி விலக வேண்டும். இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்று கிளர்ச்சி யாளர்கள் சார்பில் பங்கேற்ற பிரதி நிதிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதற்கு சிரியா அரசு தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக் கூட்டத்தின் மூலம் முக்கிய முடிவுகள் எதுவும் எட்டப்பட வாய்ப்பில்லை. எனினும், குறிப் பிட்ட சில பகுதிகளில் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவிகளை செய்ய அனு மதிப்பது, இருதரப்பிலும் பிடித்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உடன்பாடு ஏற்பட மத்தியஸ்தர்கள் முயற்சித்து வருகின்றனர்.