

பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் ரஹீல் ஷெரீப்பை அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் நியமித்துள்ளார்.
பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதிகளின் குழு தலைவராக லெப்டினென்ட் ஜெனரல் ரஷீத் மெஹ்மூத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரின் பெயர்களை பிரதமர் நவாஸ் ஷெரீப், அதிபர் மம்னுன் ஹுசைனிடம் பரிந்துரைத்தார். அதை ஏற்று இருவருக்கான நியமன ஆணைகளில் அதிபர் கையெழுத்திட்டார்.
இருவருக்கும் ஜெனரலாக பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பு, அவர்களை தனித்தனியே சந்தித்து பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆலோசனை நடத்தினார்.
கடந்த 6 ஆண்டுகளாக ராணுவத் தலைமைத் தளபதியாக உள்ள அஸ்பக் பர்வேஸ் கயானி (61), நவம்பர் 29-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவரது பதவிக்கு ரஹீல் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பணி மூப்பு அடிப்படையில் கயானிக்கு அடுத்த நிலையில் உள்ள லெப்டினென்ட் ஜெனரல் ஹாரூன் அஸ்லாம் ஓரங்கட்டப்பட்டு, அவரைவிட அனுபவத்தில் குறைந்த ரஹீலுக்கும், மெஹ்மூத்துக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லெப்டினென்ட் ஜெனரல் ரஹீல் ஷெரீப், குஜ்ரன்வாலா படைப்பிரிவு கமாண்டர், பாகிஸ்தான் ராணுவ அகாதெமியின் கமாண்டன்ட், லாகூர் படைப் பிரிவின் கமாண்டர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
லெப்டினென்ட் ஜெனரல் ரஷீத் மெஹ்மூத், இதற்கு முன்பு லாகூர் படையின் கமாண்டராகவும், முன்னாள் அதிபர் ரபிக் தராரின் ராணுவச் செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார். அவர் பலூச் ரெஜிமெண்டை சேர்ந்தவர். அஸ்பக் பர்வேஸ் கயானியின் தலைமையின் கீழ் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் துணை தலைமை இயக்குநராகவும் மெஹ்மூத் பணியாற்றியுள்ளார்.
இருவரும் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நவம்பர் 29-ம் தேதி நடைபெறவுள்ளது. பதவியிலிருந்து ஓய்வுபெறும் கயானிக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் புதன்கிழமை விருந்தளித்தார்.
பாகிஸ்தானின் பக்கத்து நாடான ஆப்கானிஸ்தானில் அடுத்த ஆண்டு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேற உள்ளன. பாகிஸ்தான் தலிபான்களுடன் அந்நாட்டு அரசு பேச்சு நடத்தி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் இந்த இருவரும் முக்கிய பதவிகளில் பொறுப்பேற்க உள்ளனர்.
நவாஸுக்கு இது நான்காவது முறை
ராணுவத் தலைமைத் தளபதிகளை நியமிக்கும் பணியை நான்காவது முறையாக பிரதமர் நவாஸ் ஷெரீப் இப்போது மேற்கொண்டுள்ளார்.
1993-ம் ஆண்டு பிரதமராக இருந்தபோது அப்துல் வாஹீத் காகரை தலைமைத் தளபதியாக நவாஸ் நியமித்தார். ஆனால், பின்னாளில் நவாஸின் பதவி பறிபோவதில் காகர் முக்கிய பங்கு வகித்தார். 1998-ம் ஆண்டு பர்வேஸ் முஷாரபை தலைமைத் தளபதியாக நியமித்ததும் நவாஸ்தான். 1999-ம் ஆண்டு ராணுவப் புரட்சி செய்து நவாஸ் ஆட்சியை கவிழ்த்தார் முஷாரப்.
முஷாரபின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளின்போது, அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஜியாவுதின் பட்டை தலைமைத் தளபதியாக நியமிப்பதாக நவாஸ் அறிவித்தார். ஆனால், அது வெறும் அறிவிப்புடன் நின்றுபோனது. ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின் ராணுவ ஆட்சியாளராக முஷாரப் பொறுப்பேற்றுக் கொண்டது நினைவுகூரத்தக்கது.