

அமெரிக்காவின் கொலம்பியா மாகாண மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இந்திய அமெரிக்கரான சீனிவாசன், வியாழக்கிழமை பதவியேற்றார்.
அமெரிக்காவின் அதிக அதிகாரம் வாய்ந்த நீதிமன்றங்களில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்கும் முதல் இந்திய அமெரிக்கர் இவர்தான்.
சீனிவாசன் (46) சண்டீகரில் பிறந்தவர். 1970-ம் ஆண்டுகளில் இவரது பெற்றோர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். கொலம்பியா மாகாண மேல்முறையீட்டு நீதிமன்ற த்தில் வியாழக்கிழமை சீனிவாசன் பதவியேற்றார். பதவியில் இருந்து ஓய்வு பெறும் நீதிபதி சாண்ட்ரா டே ஒகனர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தனது தாயார் சரோஜா கையில் வைத்திருந்த பகவத் கீதை புத்தகத்தின் மேல் ஆணையிட்டு சீனிவாசன் பதவிப் பிரமாண உறுதிமொழி ஏற்றார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குருசரண் கௌர், சீனிவாசனின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மன்மோகன் சிங்குடன் அமெரிக்கா வந்துள்ள குர்சரண் கவுர், விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு வந்து சிறிது ஓய்வெடுத்தபின் இந்த நிகழ்ச்சிக்கு வந்தார். அமெரிக்க வரலாற்றில் தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பது இதுவே முதல்முறை.
அமெரிக்காவின் தலைமை துணைநிலை சொலிசிட்டர் ஜெனரலாக சீனிவாசன் பணியாற்றி வந்தார். 2012-ம் ஆண்டு ஜூனில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கொலம்பியா மாவட்ட சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிபதியாக இவரை தேர்ந்தெடுத்தார். இதற்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்தது.