

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதற்கு இலங்கை ஊடகங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் தடை உத்தரவு, இலங்கையில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளுக்கு கிடைத்த பலத்த அடி எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
'ரிவிரா' என்ற சிங்கள தினசரி பத்திரிகையில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தலையங்கத்தில்: "ராஜீவ் காந்தி இலங்கை தேசத்தின் இறையான்மைக்கு சவாலாக இருந்தார். விடுதலைப் புலிகளுக்கு அவர் ஆதரவு அளித்தது இலங்கை மக்கள் மத்தியில் கசப்புணர்வை ஏற்படுத்தியது. இருப்பினும், ராஜீவ் படுகொலையில் இலங்கை எப்போதும் குதூகலித்தது கிடையாது. ராஜீவ் கொலயாளிகள் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றத்தின் தலையீடு, இலங்கையிலுள்ள பிரிவினைவாதிகளுக்கு விழுந்த பேரடி" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் 'தி ஐலாண்ட்' என்ற நாளிதழில், கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் பாஜக அரசுகளின் தவறான கொள்கைகளால் 'வால் நாயை ஆட்டும்' நிலை தான் ஏற்பட்டிருக்கிறது என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.