

இந்திய பெருங்கடல் பகுதியில் மலேசிய விமானத்தின் நொருங்கி விழுந்ததாக கருதப்படும் பகுதியில் விமானத்தின் 300 பாகங்கள் மிதக்கும் காட்சியை தாய்லாந்து செயற்கைகோள் பதிவு செய்துள்ளது. எனினும் அவை விமானத்தின் உடைந்த பாகங்கள் தானா என்று உறுதிபடுத்தப்படவில்லை. மேலும், புகைப்படங்கள் குறித்தான தகவல்கள் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் அனான்ட் ஸ்னிவாங்ஸ், ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான பெர்த் அருகே உள்ள இந்திய பெருங்கடற் பரப்பில்,2 மீட்டரிலிருந்து 15 மீட்டர் நீளமுள்ள மற்றும் பல்வேறு அளவுகளில் 300 உதிறி பாகங்கள் மிதப்பது போலான படத்தை தாய்லாந்து செயற்கைகோள் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாயமான எம்.எச்.370 மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் மூழ்கி அதில் இருந்த 239 பேரும் பலியாகிவிட்டனர் என்று அந்த நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் அறிவித்திருந்தார்.
இதனை அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா கடல் நடுவில் அமைந்துள்ள கடற்பரப்பில் ஐந்து நாடுகளை சேர்ந்த விமானங்கள் தேடுதலை மேற்கொண்டது.இந்திய பெருங்கடலில் விமானம் நொருங்கி விழுந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் விமானத்தின் பாகங்கள் இருக்கும் கடல்பறப்பை கண்டறிவதில் மிகுந்து சிரமம் ஏற்பட்டது.
நொருங்கி விழுந்த விமானத்தின் கருப்பு பெட்டி கடலில் மூழ்கி இருந்தால் அதிலிருந்து வெளிவரும் சிக்னல் உதவியுடன் கருப்பு பெட்டியை மீட்க முடியும் என்று அமெரிக்க கடற்படை உறுதியுடன் தெரிவித்திருந்தது.
கடலுக்கு அடியில் இருக்கும் கருப்பு பெட்டியின் பேட்டரி ஒரு மாததில் செயலிழந்து விடும். விமானம் கடந்த 8- ஆம் தேதி மாயமான நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
இந்த நிலையில் இந்த தொழில்நுட்பம் கொண்ட அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ப்ளுபின் - 21' என்ற, கடலுக்கடியில் தானாக இயங்கி, கருப்பு பெட்டியை கண்டறியும் கப்பல் ஆஸ்திரேலியா வந்து சேர்ந்துள்ளது.