

தாய்லாந்தில் புதைக்கப்பட்ட குழந்தையை நாய் ஒன்று காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து தாய்லாந்து ஊடகங்கள், ''பிங் பாங் என்ற நாய், தாய்லாந்தின் நாங்காம் கிராமத்தின் கதாநாயகனாகி உள்ளது.
அக்கிராமத்தில் சிறுமி ஒருவர் தனக்கு குழந்தை பிறந்துள்ளதை மறைக்க அக்குழந்தையை யாருக்கும் தெரியாத வண்ணம் மண்ணில் புதைத்திருக்கிறார்.
இதற்கிடையில் பிங் பாங் என்ற நாய் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் வட்டமிட்டு மண்ணைத் தோண்டியுள்ளது. இதில் குழந்தையின் கால் தெரிய, அந்த நாயின் உரிமையாளர்கள் கிராமவாசிகளை அழைத்து அந்த இடத்தைத் தோண்டி குழந்தையை மீட்டெடுத்துள்ளனர். தற்போது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தையைக் காப்பாற்றிய பிங் பாங் தற்போது கிராம வாசிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது'' என்று செய்தி வெளியிட்டுள்ளன.
குழந்தையைப் புதைத்த சிறுமி மனநல மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார் என்றும், அவர் தனது பெற்றோர்கள் மீது இருந்த பயத்தினால் இவ்வாறு செய்தததாகவும் இதற்காக அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்றும் தாய்லாந்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.