

விபத்தில் சிக்கிய அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர்.
ராஸ் தனுரா: சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்தில் சிக்கியது. இதில் 14 பேர் உயிரிழந்தனர்.
உலகிலேயே கச்சா எண்ணெய் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு சவுதி அரேபியா. இங்கு கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதில் சவுதி அரசின் அராம்கோ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் சுத்திகரிப்பு நிலையங்கள், ஹார்முஸ் ஜல சந்தியின் மேற்கு கடலோர பகுதியான ராஸ் தனுரா என்ற பகுதியில் அமைந்துள்ளன. ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜல சந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கியதால், அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் கடந்த 4 மாதங்களாக எந்த பணியும் நடைபெறாமல் இருந்தது. இதனால் பெட்ரோலியப் பொருட்கள், எரிவாயு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் முற்றிலும் தடைபட்ட நிலையில் இருந்தன.
இந்நிலையில் ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, ஹார்முஸ் ஜல சந்தியில் கடந்த சில நாட்களாக கப்பல் போக்குவரத்து தொடங்கியது. இதனால் அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் மீண்டும் பணிகள் தொடங்கின.
இங்கு பணியாற்றும் அராம்கோ நிறுவனத்தின் அதிகாரிகள், பொறியாளர்கள், தங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணம் செய்வது வழக்கம். இங்கு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதை அடுத்து, நிறுவனத்தின் ஹெலிகாப்டரில் 14 ஊழியர்கள் பயணம் செய்தனர்.
எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் நேற்று காலை விபத்தில் சிக்கியது. இதில், ஹெலிகாப்டரில் இருந்த 14 பேரும் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் குறித்து சவுதி அரேபிய அரசு விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: சவுதி அராம்கோ நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ராஸ் தனுராவில் நேற்று காலை 6 மணி அளவில் விபத்தில் சிக்கியதை அறிவிப்பதில் எரிசக்தி துறை அமைச்சகம் வருந்துகிறது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த சவுதி அரேபியர்கள் 14 பேரும் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.