அமெரிக்காவுக்கு 5 நாள் அரசு முறைப் பயணமாக சென்ற ​பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு கடும் எதிர்ப்பு

தேசிய அவமானம் என்ற தலைப்பில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசீம் முனிரை விமர்சிக்கும், எலக்ட்ரானிக் திரை வாகனம், அவர் தங்கியிருந்த ஓட்டல் முன் நிறுத்தப்பட்டது.
தேசிய அவமானம் என்ற தலைப்பில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசீம் முனிரை விமர்சிக்கும், எலக்ட்ரானிக் திரை வாகனம், அவர் தங்கியிருந்த ஓட்டல் முன் நிறுத்தப்பட்டது.
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு 5 நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிருக்கு, இம்ரான் கட்சி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாகிஸ்தான் ராணுவ தளபதியாக அசிம் முனிருக்கு சமீபத்தில் ஃபீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் தோல்வியை மறைப்பதற்காக இந்த பட்டம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் 5 நாள் அரசு முறைப் பயணமாக அசிம் முனிர் அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற அமெரிக்க ராணுவத்தின் 250-வது விழா கொண்டாட்டத்துக்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதை வெள்ளை மாளிகை மறுத்தது. ராணுவ உறவுகள் தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாக். ராணுவ தளபதி அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அமெரிக்க ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் வாஷிங்டனில் பாக். ராணுவ தளபதி அசிம் முனிர் தங்கியிருந்த ஓட்டலை, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். ஜெனரல் ஆசிம் முனிருக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். ‘‘பாகிஸ்தானில் ஜனநாயகத்துக்காக போராடும் மக்களை கொல்லும் அராஜக கொலையாளி. உங்களை போன்ற நபர்களால் வெட்கக்கேடு’ என கோஷமிட்டனர்.

ஓட்டலுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியர்களை போலீஸார் தடுத்தனர். அவர்களுடன் இம்ரான் கட்சி ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஓட்டலுக்கு அருகில் உள்ள எலக்ட்ரானிக் திரையிலும், அசிம் முனிர், ஜனநாயகத்துக்கா போராடும் மக்களை கொல்லும் கொலையாளி என அவர்கள் விளம்பரம் செய்தனர்.

பாகிஸ்தானில் தற்போதை ஆட்சிக்கு எதிராக இம்ரான் கட்சி ஆதரவாளர்கள் உள்ளனர். பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் சையது அனில் முனிரும், இம்ரானுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் பாக்.ராணுவ தளபதியின் வருகைக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது அவருக்கு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in