Last Updated : 11 Jun, 2025 02:09 PM

 

Published : 11 Jun 2025 02:09 PM
Last Updated : 11 Jun 2025 02:09 PM

லாஸ் ஏஞ்சல்ஸில் தொடரும் பதற்றம்: ஊரடங்கு உத்தரவு அமல்

லாஸ் ஏஞ்சல்ஸ்: டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற சோதனைகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக நீடிக்கும் வன்முறை போராட்டங்கள், தீ வைப்பு சம்பவங்களுக்குப் பிறகு, கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல பகுதிகளில் வரையறுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அந்நகரத்தின் மேயர் கரென் பாஸ் அறிவித்துள்ளார்.

இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் எனவும், இன்னும் பல நாட்கள் இந்த உத்தரவு அமலில் இருக்கலாம் என்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரென் பாஸ் கூறினார். இருப்பினும், குடியிருப்பாளர்கள் மற்றும் அப்பகுதியில் பணிபுரியும் மக்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு பொருந்தாது என்று அவர் கூறினார். இரவு நேரங்களில் வன்முறை அதிகரித்ததை தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்த இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. இந்தக் கலவரத்தை ஒடுக்கும் பணியில் காவல்துறை, தேசிய ராணுவ படையைச் சேர்ந்த வீரர்களுடன் தற்போது ‘யுஎஸ் மரைன்ஸ்’ என்ற பாதுகாப்புப் படையின் கடற்படை பிரிவினைச் சேர்ந்த 700 வீரர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 4,000 க்கும் மேற்பட்ட தேசிய ராணுவ துருப்புக்கள் மற்றும் 700 கடற்படையினரை நிறுத்துவது குறித்து கேள்வி எழுப்பிய மேயர் கரேன் பாஸ், “கடற்படையினர் இங்கு வந்ததும் என்ன செய்யப் போகிறார்கள் என்று மக்கள் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அது ஒரு நல்ல கேள்வி, எனக்கும் இதுபற்றி எதுவும் தெரியாது. லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறைக்கு கூடுதல் உதவி தேவைப்படுகிறது. ஆனால் டிரம்ப் நிர்வாகத்திடமிருந்து அல்ல. நகரத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருவதைத் தடுப்பதற்கான உண்மையான தீர்வு ட்ரம்ப் நிர்வாகம் தனது சோதனைகளை நிறுத்துவதே" என்று தெரிவித்து நகரத்தில் பகுதி ஊரடங்கு உத்தரவை அறிவித்தார்.

தேசிய காவல்படை அமெரிக்காவில் மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்களின் கூட்டு அதிகார வரம்பிற்குள் வருவதால், மாகாண ஆளுநரின் அதிகாரத்தை மீறியதற்காகவும், தேசிய ராணுவ துருப்புக்களை அனுப்ப ஆளுநரின் அனுமதியைப் பெறத் தவறியதற்காகவும் அதிபர் டிரம்ப் மீது வழக்குத் தொடர கலிபோர்னியா தயாராகி வருகிறது.

கலிஃபோர்னியாவின் உள்ளூர்ப் படைகள் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தயார் நிலையில் உள்ளதாக ஆளுநர் நியூசம் தெரிவித்த பிறகும், எந்தவொரு மாகாணத்திலும் தேசிய ராணுவ துருப்புக்களை நிறுத்த அனுமதிக்கும் கூட்டாட்சி சட்டத்தின் மூன்று குறிப்பிட்ட விதிகளை ட்ரம்ப் பயன்படுத்தி படைகளை அனுப்பினார்.

இதுகுறித்து பேசிய கலிபோர்னியா ஆளுநர் நியூசம், “இந்த விவகாரத்தில் டிரம்ப் ஈடுபடும் வரை எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இது மாகாண இறையாண்மையை கடுமையாக மீறுவதாகும். வளங்களை அவை உண்மையில் தேவைப்படும் இடத்திலிருந்து இழுக்கும் போது பதற்றங்களைத் தூண்டுகிறது.”என்று எழுதினார்.

இதுகுறித்து விளக்கமளித்த ட்ரம்ப், “லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த போராட்டங்கள் அமைதி மற்றும் பொது ஒழுங்கின் மீதான தாக்குதல். எனவே அரிதாகப் பயன்படுத்தப்படும் கிளர்ச்சி சட்டத்தைப் பயன்படுத்தி எதிர்ப்பாளர்களைக் கட்டுப்படுத்த இராணுவத்தை அனுப்பினேன். கலிபோர்னியாவில் நீங்கள் காண்பது அமைதி, பொது ஒழுங்கு மற்றும் தேசிய இறையாண்மையின் மீதான முழுமையான தாக்குதலாகும், இது வெளிநாட்டுக் கொடிகளைத் தாங்கிய கலகக்காரர்களால் நடத்தப்படுகிறது.” என்று ட்ரம்ப் கூறினார்.

பின்னணி என்ன? - அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல்வேறு இடங்களில் குடியேற்றம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையைக் கண்டித்து முகக்கவசம் (மாஸ்க்) அணிந்த பலர் தொழில் பூங்காவுக்கு எதிரில் இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்களுக்கும் எல்லை ரோந்து அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது. இதையடுத்து, போராட்டத்தை மாகாண அரசு ஒடுக்கவில்லை என குற்றஞ்சாட்டிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், சுமார் 2,000 ராணுவ வீரர்களை (தேசிய படையினர்) போராட்டத்தை ஒடுக்கும் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூசம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கரென் பாஸ் ஆகியோருக்கு போராட்டத்தை ஒடுக்கும் திறன் இல்லை. பிறரின் தூண்டுதலின் பேரிலும் பணம் வாங்கிக் கொண்டும் நடைபெறும் போராட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் முகக் கவசம் அணிய தடை விதிக்கப்படுகிறது” என கூறினார்.

போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை ஈடுபடுத்தியதற்கு கலிபோர்னியா ஆளுநர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ட்ரம்பின் இந்த நடவடிக்கை பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என குற்றம் சாட்டினார். மேலும் அவருடைய நடவடிக்கை மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என்றும் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x