

தாய்லாந்தில் தாம் லூங் குகையில் சிக்கிக் கொண்டிருந்த 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் என அனைவரும் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.
18 நாட்கள் நடந்த இந்த மீட்புப் பணி, தாய்லாந்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இன்றைய நாளிதழ்களில் தலைப்பு செய்தியாகியுள்ளது.
அதற்கு முக்கிய காரணம் குகையில் சிக்கிய அனைவரையும் உயிருடன் மீட்டு வெற்றிக்கரமான மீட்புப் பணியாக வரலாற்றில் இது பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
இரவு பகல் பாராது உழைத்த மீட்பு குழுவினர்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட உலகத் தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த வேளையில் 18 நாட்களாக மீட்புப் படையினர் கடந்து வந்த பாதையை காணலாம்.
ஜூன் 24, 2018
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகையில் கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்கு சாகசப் பயணம் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளர் ஒருவரும் சென்றிருந்தார்.
இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ள நீர் குகைக்குள் சூழ்ந்து கொண்டது. நீரும், சேறுமாகக் குகை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் தாய்லாந்து கடற்படை இறங்கியது.
ஜூன் 25, 2018
தொடர்ந்து மழை பெய்துக் கொண்டிருக்க குகையில் சிறுவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிய தேடுதல் தொடர்ந்தது. சிறுவர்களின் உறவினர்கள் பிரார்த்தனைகளுடன் குகைக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தனர்.
ஜுன் 26, 2018
குகையில் தண்ணீர் வெள்ளம் போல் சூழ்ந்து இருந்ததால் சிறுவர்கள் வெளியே வராமல் உள்ளேயே எங்கேயாவது பதுங்கி இருக்கலாம் என்று மீட்புப் பணியினர் கருதினர்.
ஜூன் 27, 2018
தொடர்ந்து மீட்புப் பணியில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மீட்புப் பணி வீரர்கள் இணைந்தனர்.
ஜூன் 28, 2018
தொடர்ந்து குகையிலிருந்து நீரை வெளியேற்று பணியில் மீட்புப் பணி வீர்ரகள் ஈடுபட்டனர்.
ஜூன் 29, 2018
தாய்லாந்து பிரதமர் பிராயுத் சான் ஒ சா சிறுவர்களின் பெற்றோரை சந்தித்து நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று ஆறுதல் கூறினார்.
ஜூன் 30, 2018
மழையின் அளவு குறைந்ததால் மீட்புப் பணி வீரர்கள் குகைக்குள் சென்று தேடுதலில் ஈடுபட்டனர். சிறுவர்கள் குகைக்குள் வெகு தொலைவில் இருப்பதை கண்டறிந்தனர்.
ஜூலை 1, 2018
மீட்புப் பணியினர் காற்று நிரப்பப்பட்ட டேங்குகளை உள்ளே கொண்டு செல்லும் அடுத்தக்கட்ட ஆபரேஷனை தொடங்கினர்.
ஜூலை 2, 2018
அந்த அதிசியம் நிகழ்ந்தது 12 சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாளர் இருக்கும் இடத்தை மீட்புப் படையினர் கண்டறிந்தனர். ஆனால் அதே வேளையில் அங்கிருந்து சிறுவர்களை வெளியே கொண்டு வருவது அவ்வளவு எளிமையானது இல்லை எனவும், அது ஆபத்தான பயணம் என்றும் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
ஜூலை 3, 2018
சிறுவர்களுக்கு தேவைப்பட்ட உணவு, தண்ணீர், மருத்துகள் வழங்கப்பட்டன.
ஜுலை 4, 2018
தொடர்ந்து குகையிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். சிறுவர்கள் தாங்கள் பாதுகாப்பகாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக கூறிய வீடியோ வெளியானது.
ஜுலை 5, 2018
மழை மீண்டும் சிக்கலை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.
ஜூலை 6, 2018
குகையில் ஆக்சிஜன் அளவு குறைந்து வந்தது. இதனால் சிறுவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த சந்தேங்கள் மீட்புப் படையினருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட சமான் குனான் என்ற தாய்லாந்து வீரர் மீட்புப் பணியின்போது உயிரிழந்தார்.
ஜூலை 7, 2018
மீட்புப் பணி குழுவின் தலைவர் நரோங்சாங் ஒசோடான்கோர்ன் சிறுவர்கள் நீத்துவதற்கு தயாராக இல்லை என்றார்.அதே வேளையில் சிறுவர்கள் அவர்களது பெற்றோருக்கு யாரும் கவலைப்பட வேண்டாம் என்று எழுதிய கடிதங்கள் வெளிவந்தன.
ஜுலை 8, 2017
மீட்புப் படையினர் முதல்கட்டமாக நான்கு சிறுவர்களை மீட்டனர்.
ஜூலை 9, 2018
தொடர்ந்து திங்கட்கிழமை மீட்புக் குழுவினரால் மேலும் 4 சிறுவர்களை மீட்க்கப்பட்டனர்.
ஜூலை 10, 2018
மீட்புப் பணியினர் கடைசி கட்டமாக நான்கு சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் என அனைவரும் வெற்றிக்கரமாக மீட்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து தாய்லாந்து மீட்புப் பணி குழுவைச் சேர்ந்த நான்கு வீர்ரகள் வெளியே வந்தனார்.
மீட்கப்பட்ட அனைவரும் உடலளவிலும், மனதளவிலும் நலமாக இருப்பதாகவும் தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருவதாகவும் தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.