போர் தொடர்பான போலி புகைப்படத்தை பாக். பிரதமருக்கு பரிசாக வழங்கிய ராணுவ தளபதி

பாகிஸ்தான் ராணுவத்தின் ஆபரேஷன் புன்யான் உல் மார்சூஸ் வெற்றி பெற்றதாக கூறி போலி புகைப்படத்தை பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு பரிசாக வழங்கிய ராணுவ தளபதி ஆசிம் முனீர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் ஆபரேஷன் புன்யான் உல் மார்சூஸ் வெற்றி பெற்றதாக கூறி போலி புகைப்படத்தை பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு பரிசாக வழங்கிய ராணுவ தளபதி ஆசிம் முனீர்.
Updated on
1 min read

போர் தொடர்பான போலி புகைப்படத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு அந்த நாட்டு ராணுவ தளதி ஆசிம் முனீர் நினைவு பரிசாக வழங்கி உள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது.

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் போரை நடத்தின. இதேபோல பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் ஆபரேஷன் புன்யான் உல் மார்சூஸ் என்ற பெயரில் போர் நடத்தப்பட்டது. இந்திய ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சர்வதேச நாடுகளின் உதவியை பாகிஸ்தான் நாடியது. இறுதியில் பாகிஸ்தான் மூத்த தளபதி நேரடியாக இந்திய ராணுவ மூத்த தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று கடந்த 10-ம் தேதி இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இந்த சூழலில் ஆபரேஷன் புன்யான் உல் மார்சூஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் ராணுவம் கூறி வருகிறது. இதுதொடர்பாக ராணுவத்தின் சார்பில் கடந்த 3-ம் தேதி இரவு இஸ்லாமாபாத்தில் மிகப்பெரிய விழா நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உட்பட அந்த நாட்டின் மூத்த தலைவர்கள், மூத்த ராணுவ தளபதிகள் பங்கேற்றனர்.

இந்த விழாவின்போது போர் தொடர்பான புகைப்படத்தை பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு ராணுவ தளபதி ஆசிம் முனீர் வழங்கினார். இந்த புகைப்படம் போலி புகைப்படம் என்று பாதுகாப்பு துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “சீன ராணுவத்தின் போர் ஒத்திகை புகைப்படத்தை பாகிஸ்தான் தளபதி ஆசிம் முனீர் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு நினைவு பரிசாக வழங்கி உள்ளார். இந்த புகைப்படம் கடந்த 2019-ம் ஆண்டில் சீன ராணுவம் நடத்திய போர் ஒத்திகை ஆகும். அதற்கான ஆதாரங்கள் இணையத்தில் நிறைந்துள்ளன" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in