Published : 16 Apr 2025 08:59 AM
Last Updated : 16 Apr 2025 08:59 AM
டெக்சாஸ்: விண்வெளி சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பிய தனது காதலியை தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ் கட்டியணைத்து வரவேற்றார்.
தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ், ப்ளு ஆர்ஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை தொடங்கி விண்வெளி பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். இதற்காக ப்ளூ ஆர்ஜின் என்ற ராக்கெட்டும், 6 பேர் பயணம் செய்யும் வகையில் ‘நியூ செபார்ட்’ என்ற விண்கலமும் உருவாக்கப்பட்டது.
இதில் பிரபல பாப் பாடகி கெட்டி பெர்ரி, தொழிலதிபர் ஜெஃப் பெசோசின் காதலி லாரன் சான்செஸ், சிபிஎஸ் டி.வி. தொகுப்பாளர் கேல் கிங் நாசா விஞ்ஞானி ஆயிஷா போவே, விஞ்ஞானி அமாண்டா இங்குயென், திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோர் நேற்று முன்தினம் பயணம் செய்தனர்.
நியூ செபார்ட் விண்கலத்துடன், ப்ளூ ஆர்ஜின் ராக்கெட் அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸில் இருந்து புறப்பட்டது. புவியின் வளிமண்டலத்தை கடந்து விண்வெளிக்குள் நுழைந்ததும், விண்கல குழுவினர் புவியீர்ப்பு விசை இன்மை, உடல் எடை குறைவு ஆகியவற்றை உணர்ந்தனர். விண்வெளியிலிருந்து அவர்கள் பூமியை பார்த்து ரசித்தனர்.
அப்போது பாடகி பெர்ரி, ‘வாட் எ வொண்டர்ஃபுல் வேர்ல்ட்’ என்ற பாடலை பாடினார். அவர் தன்னுடன் டெய்சி மலரை எடுத்துச் சென்றார். மகள் ‘டெய்சி’ யின் நினைவாக அவர் அதை எடுத்துச் சென்றார்.
சுமார் 11 நிமிடங்கள் விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு, நியூ செபார்ட் விண்கலம் பாராசூட் மூலம் பூமியில் தரையிறங்கியது. அப்போது பாடகி பெர்ரி டெய்சி மலரை முத்தமிட்டபடி விண்கலத்திலிருந்து இறங்கினார். தனது காதலி லாரன் சான்செஸ் விண்கலத்தை விட்டு வெளியேறும் போது அவரை ஜெஃப் பெசோஸ் கட்டியணைத்து வரவேற்றார்.
இதற்கு முன் கடந்த 1963-ம் ஆண்டு ரஷ்ய விண்வெளிப் பெண் வேலன்டினா டெரஸ்கோவா, விண்கலத்தின் தனியாக 3 நாள் விண்வெளியில் சுற்றிவிட்டு பூமி திரும்பினார். அதன்பின் தற்போதுதான் முழுவதும் பெண்களுடன் நியூ செபார்ட் விண்கலம் விண்வெளிப் பயணத்தை முடித்து பூமி திரும்பியுள்ளது.
விண்வெளி சுற்றுலா செல்ல விண்கலத்தில் ஒரு இருக்கைக்கான கட்டணம் எவ்வளவு என்பதை ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனால் விண்வெளி பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் திருப்பி செலுத்தக்கூடிய டெபாசிட்டாக, 1,50,000 டாலர் செலுத்த வேண்டும் என அதன் இணையளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டே, விண்வெளி பயணத்துக்கான ‘நியூ செபார்ட்’ விண்கல கட்டணம் அதிகபட்சம் 28 மில்லியன் டாலரை வரை ஏலம் போனதாக ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தெரிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT