Published : 10 Mar 2025 01:20 AM
Last Updated : 10 Mar 2025 01:20 AM
புதுடெல்லி: கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திர் மீது மர்ம நபர்கள் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சினோ ஹில்ஸ் பகுதியில் இந்து கோயிலான பாப்ஸ் ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திர் மீது மர்ம நபர்கள் சிலர் நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தினர். இதில் கோயில் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக இணையதளத்தில் வெளியான பதிவில் செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறும்போது, “சினோ ஹில்ஸ் பகுதியில் இந்து கோயில் மீது தாக்குதல் நடந்தது குறித்த தகவல்களை அறிந்தோம். கீழ்த்தரமான இதுபோன்ற தாக்குதல்களை வன்மையான சொற்களால் கண்டிக்கிறோம். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளோம். அத்துடன் வழிபாட்டு தலங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக தாக்குதல் குறித்து பாப்ஸ் சுவாமி நாராயண் மந்திர் மக்கள் விவகாரப் பிரிவு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மீண்டும் ஒரு இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த முறை சினோ ஹில்ஸ் பகுதியில் உள்ள சுவாமி நாராயண் கோயில் மீது தாக்குதல் நடந்துள்ளது. பிரிவினை, கருத்து வேறுபாடுகளை விதைக்கும் எந்த செயலையும் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். வெறுப்புணர்வை தூண்டும் எந்த செயலையும் வன்மையாக கண்டிக்கிறோம். வெறுப்புணர்வு வேரூன்ற விடமாட்டோம். எங்களுடைய பொதுவான, மனித நேயம், நம்பிக்கை போன்றவை அமைதி, இரக்கத்தை உறுதிப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் உள்ள பாப்ஸ் மந்திர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். அதற்கு சில நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 25-ம் தேதி கலிபோர்னியாவின் சேக்ரமென்டோ பகுதியில் உள்ள சுவாமி நாராயண் மந்திர் மீது தாக்குதல் நடந்தது. இந்நிலையில் தற்போது சினோ ஹில்ஸ் பகுதியில் உள்ள கோயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT