

மாஸ்கோ: ரஷ்யாவின் மத்தியப் பகுதியான தாதர்ஸ்தான் பிராந்தியத்தின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் குழந்தை உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் போரில், ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் நடத்திய மிக மோசமான மற்றும் பேரழிவு தாக்குதல் இது என்று கருதப்படுகிறது.
உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நிஷ்னெகாம்ஸ்க் என்ற தொழில் நகரத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 75 பேரில் 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தாதர்ஸ்தான் பிராந்திய அரசு அறிவித்தது.
இந்த ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, நடப்பு ஆண்டில் இரு நாடுகளுமே தொலைதூர இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் பெருமளவில் தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் உயிரிழப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
எரிபொருள் வளங்கள் நிறைந்த தாதர்ஸ்தான் பிராந்தியத்தில் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்திருப்பதால், உக்ரைன் தனது பதில் தாக்குதல்களுக்கு இப்பகுதியைத் தொடர்ந்து இலக்காகக் கொண்டு வருகிறது.
ரஷ்யாவின் போர் ஆற்றலைக் குறைக்கும் நோக்கிலேயே ‘டாட்நெஃப்ட்’ நிறுவனத்தின் கீழ் இயங்கும் ‘டனேகோ’ சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், அந்நாட்டின் வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள புகாய்வ்கா கிராமத்தின் குடியிருப்புப் பகுதியைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், உக்ரைன் அனுப்பிய 456 ட்ரோன்களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.