

புதுடெல்லி: கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கான காவிரி நீர் பங்கினை உடனடியாக விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த புதிய மனுவை ஆகஸ்டு 13-ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுகளின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆகஸ்ட் 3 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து தமிழக அரசு வழக்கறிஞர் தனது வாதங்களை முன்வைத்த பின்னர், தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, “நாங்கள் இந்த விவகாரத்தை வியாழக்கிழமை (ஆக.13) விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்” என்று கூறினார்.
காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஒதுக்கிய அளவு மற்றும் கர்நாடகா உண்மையில் விடுவித்த நீர் அளவு ஆகிய இரண்டுமே தங்களுக்குரிய பங்கை விட மிகக் குறைவாக இருந்ததாக தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.
முன்னதாக, இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘28.07.2026 அன்று நடைபெற்ற 139-வது கூட்டத்தில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு காவிரி படுகையின் நீரியல் - வானிலை சூழலை ஆய்வு செய்து, 29.07.2026 அன்று காலை 8.00 மணி முதல் 12.08.2026 வரை 15 நாட்களுக்கு பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3500 கன அடி (cusecs) வீதம் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.
30.07.2026 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது அவசர கூட்டத்திலும் காவிரி படுகையின் நீரியல் - வானிலை நிலவரம் ஆய்வு செய்யப்பட்டு, குழுவின் முடிவு உறுதி செய்யப்பட்டது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுக்குப் பிறகு, பில்லிகுண்டுலுவில் 29.07.2026 முதல் 02.08.2026 வரை வரப்பெற்ற நீரின் அளவு வினாடிக்கு 158 முதல் 550 கனஅடி மட்டுமே.
3 ஆகஸ்ட் 2026 நிலவரப்படி, கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையில் 23.078 டி.எம்.சி நீரும், கபினியில் 18.610 டி.எம்.சி நீரும், ஹாரங்கியில் 7.827 டி.எம்.சி நீரும், ஹேமாவதியில் 28.022 டி.எம்.சி நீரும - மொத்தம் 77.537 டி.எம்.சி - இருப்பு (பயன்பாட்டு நீர் இருப்பு 67.517 டி.எம்.சி) உள்ளது.
எனவே, விகிதாச்சார அடிப்படையில் பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரைத் தனது அணைகளில் இருந்து திறந்து விடுவதில் கர்நாடக அரசுக்கு எந்தச் சிரமமும் இருக்காது.
இதற்கிடையே, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விகிதாச்சாரப்படி பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கவேண்டிய நீரின் அளவு 26.954 டி.எம்.சி ஆகும். இதன்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவான 4.536 டி.எம்.சி மிகக் குறைவாகும்.
இச்சூழலில், விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு அளிக்க தவறியதாலும் தமிழ்நாட்டுக்கு விகிதாச்சாரப்படி கிடைக்க வேண்டிய நீர் 26.954 டி.எம்.சி என்பதாலும், மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி முதல்வர் விஜய் 03.08.2026 அன்று உச்ச நீதிமன்றத்தை அணுகி தக்க உத்தரவைப் பெற அறிவுறுத்தினார்.
முதல்வரின் அறிவுறுத்தலின்படி இப்பிரச்சனைக்கு தீர்வு காணவும் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை குறித்த காலத்தில் பெறவும் உச்ச நீதிமன்றத்தில் 03.08.2026 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.