நியூராலிங்க் சிப் 2-வது நபருக்கு வெற்றிகரமாக பொருத்தம்: எலான் மஸ்க்

நியூராலிங்க் சிப் 2-வது நபருக்கு வெற்றிகரமாக பொருத்தம்: எலான் மஸ்க்
Updated on
1 min read

ஃப்ரீமாண்ட்: நியூராலிங்க் நிறுவனம் தனது மூளை சிப்பினை வெற்றிகரமாக இரண்டாவது நபருக்கு பொருத்தி உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனை பெற்றுக்கொண்ட நபர் குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் எட்டு பேருக்கு பிரைன் சிப் பொருத்த முடியும் என எதிர்பார்ப்பதாக மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரியில் முதல் முறையாக சோதனை அடிப்படையில் மனிதருக்கு மூளையில் நியூராலிங்க் நிறுவனம் சிப் பொருத்தி இருந்தது. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 29 வயதான நோலண்ட் அதனை பொருத்திக் கொண்டார். இதன்மூலம் தன்னால் கணினியை இயக்க முடிவதாக அவர் தெரிவித்தார். இந்த சிப்பை இம்பிளான்ட் செய்தது எப்படி மற்றும் இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை எப்படி நடந்தது என்பது குறித்து நோலண்ட் தற்போது தெரிவித்துள்ளார்.

இரண்டாவது நபரின் மூளையில் இம்பிளான்ட் செய்யப்பட்ட 400 எலக்ட்ரோடுகள் செயல்பட்டு வருவதாக மஸ்க் தெரிவித்துள்ளார். அதோடு சிக்னல்கள் அதிகம் கிடைப்பதாகவும், இந்த இம்பிளான்ட் பணி சிறப்பாக நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த இரண்டாம் நபர் யார் என தெரிவிக்கவில்லை. நோலண்ட் போலவே இரண்டாவது நபரும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர். ஒரு விபத்தில் சிக்கியபோது அவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதே இந்த ஆண்டு இறுதிக்குள் தங்களது கிளினிக்கல் ட்ரையலின் (மருத்துவ சோதனை) முயற்சியாக மேலும் எட்டு பேரின் மூளையில் சிப் பொருத்த முடியும் என எதிர்பார்ப்பதாக மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்க விதிமுறைகள் இன்னோவேஷன் சார்ந்த தடைகளை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நியூராலிங்க்: நியூராலிங்க் நிறுவனம் வடிவமைத்துள்ள எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும், கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது.

இப்போது மனிதர்களுக்கு அதை பொருத்தி சோதனை மேற்கொண்டு வருகிறது. சோதனை அடிப்படையிலான இந்த ஆய்வுப் பணிகளை நியூராலிங்க் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும் என சொல்லப்படுகிறது. இரண்டாவது நபரின் மூளையில் சிப் பொருத்துவதற்கான அனுமதியை நியூராலிங்க் கடந்த மே மாதம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in