மனிதர்களுக்கு அதிசக்தி கொடுக்கும் ‘நியூராலிங்க் சிப்’ : விரைவில் 2-வது நபருக்கு பொருத்தம் - மஸ்க்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஃப்ரீமாண்ட்: எலான் மஸ்கின் ‘பிரைன்-கம்ப்யூட்டர்’ ஸ்டார்ட்அப் நிறுவனமான நியூராலிங்க் விரைவில் இரண்டாவது நபருக்கு மூளையில் தனது சிப்பினை பொருத்த உள்ளது. இது குறித்த அறிவிப்பை நேற்று நியூராலிங்க் வெளியிட்டது. இதில் மஸ்க் பங்கேற்றார்.

கடந்த ஜனவரியில் முதல் முறையாக சோதனை அடிப்படையில் மனிதருக்கு மூளையில் நியூராலிங்க் நிறுவனம் சிப் பொருத்தி இருந்தது. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 29 வயதான நோலண்ட் அதனை பொருத்திக் கொண்டார். இதன் மூலம் தன்னால் கணினியை இயக்க முடிவதாக அவர் தெரிவித்தார்.

இந்தச் சூழலில் கடந்த மே மாதம் இரண்டாவது நபருக்கு மூளையில் சிப் பொருத்துவதற்கான அனுமதியை அமெரிக்காவின் எஃப்.டி.ஏ, நியூராலிங்க் நிறுவனத்துக்கு வழங்கியதாக தகவல் வெளியானது. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் விரைவில் இரண்டாவது நபருக்கு மூளையில் சிப் பொருத்துவதாக நியூராலிங்க் அறிவித்துள்ளது.

புதன்கிழமை அன்று அந்நிறுவனம் இது குறித்து விவரித்தது. “மூளைக்குள் சிப் பொருத்தும் பணி நிலையாக நடைபெற்று வருகிறது. இப்போது தான் இரண்டாவது நபருக்கு சிப் பொருத்த உள்ளோம். அனைத்தும் சரியாக நடந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களது பணியின் எண்ணிக்கையை ஒற்றை இலக்கத்தில் அதிகரிப்போம்.

இது மனிதருக்கு அதிசக்தி தரும். ஏஐ ரிஸ்கினை தணிப்பது நியூராலிங்கின் நோக்கம். மனித நுண்ணறிவுக்கும் டிஜிட்டல் நுண்ணறிவுக்கும் இடையே நெருக்கமான கூட்டுறவை நியூராலிங்க் ஏற்படுத்தும்” என இதில் பங்கேற்ற மஸ்க் தெரிவித்தார். மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு அந்த திசுக்கள் இயல்புக்கு வர நேரம் எடுக்கும். அதன் பிறகு அனைத்தும் இயல்பாகும் என நியூராலிங்க் பிரதிநிதி தெரிவித்தார்.

நியூராலிங்க்: நியூராலிங்க் நிறுவனம் வடிவமைத்துள்ள எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும், கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது.

இப்போது மனிதர்களுக்கு அதை பொருத்தி சோதனை மேற்கொண்டு வருகிறது. சோதனை அடிப்படையிலான இந்த ஆய்வுப் பணிகளை நியூராலிங்க் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும் என சொல்லப்படுகிறது. இரண்டாவது நபரின் மூளையில் சிப் பொருத்துவதற்கான அனுமதியையும் நியூராலிங்க் கடந்த மே மாதம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in