Published : 06 Apr 2024 03:52 PM
Last Updated : 06 Apr 2024 03:52 PM

“தேர்தல் ஆதாயத்துக்காக...” - பயங்கரவாதம் குறித்த ராஜ்நாத் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்

இஸ்லாமாபாத்: “பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் ஓடிவிட்டால் அங்கும் சென்று அவர்களை கொல்வோம்” என்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், தேர்தலை கருத்தில் கொண்டு மிகை தேசியவாத உணர்வைத் தூண்டவே இவ்வாறு பேசி இருப்பதாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானை தூண்டும் விதமாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி இருக்கிறார். இதனை பாகிஸ்தான் கண்டிக்கிறது. பாகிஸ்தான் மண்ணில் நீதிக்குப் புறம்பான கொலைகளில் இந்தியா ஈடுபட்டதற்கான "மறுக்க முடியாத ஆதாரங்களை" வெளியுறவு அலுவலகம் கடந்த ஜனவரி 25 அன்று வழங்கியது.

பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதிகளை கொல்வோம் என ராஜ்நாத் சிங் கூறியிருப்பதன் மூலம், ‘பயங்கரவாதிகள்’ என்று இந்தியா தன்னிச்சையாக முடிவு செய்து பாகிஸ்தான் குடிமக்களை நியாயமற்ற முறையில் கொல்லும் குற்றத்தை இந்தியா தெளிவாக ஒப்புக்கொள்கிறது. இந்தியாவின் கொடூரமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் பொறுப்பேற்க வேண்டியது அவசியம்.

பாகிஸ்தானின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் எங்கள் நாடு உறுதியாக உள்ளது. இந்தியாவின் ஆளும் ஆட்சியானது அதிக தேசியவாத உணர்வுகளைத் தூண்டுவதற்காக வெறுப்பூட்டும் சொற்களைப் பயன்படுத்தி வருகிறது. தேர்தல் ஆதாயங்களுக்காக இத்தகைய சொற்களை நியாயமற்ற முறையில் பயன்படுத்துகிறது. இதுபோன்ற பொறுப்பற்ற நடத்தை, பிராந்திய அமைதியை பலவீனப்படுத்தும்.

பாகிஸ்தானின் அமைதிக்கான விருப்பத்தை தவறாகக் கருதக் கூடாது. பாகிஸ்தான் உறுதியானது, தன்னை பாதுகாத்துக் கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது என்பதை வரலாறு உறுதிப்படுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரிட்டனின் புகழ்பெற்ற கார்டியன் பத்திரிகையில், “இந்தியா கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் 20 பேரை கொன்றுள்ளது. அந்நிய மண்ணில் வாழும் பயங்கரவாதிகளை வீழ்த்துதல் என்ற விரிவான பயங்கரவாத ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இதனை இந்தியா செய்துள்ளது” என்று செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “இங்கே பயங்கரவாத செயல்களைச் செய்துவிட்டு, பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடினாலும், நாங்கள் அங்கேயே சென்று அவர்களை வீழ்த்துவோம். இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளுடன் நல்லுறவு பேணவே விரும்புகிறது. ஆனால், எவரேனும் இந்தியா மீது மீண்டும் மீண்டும் கோபப் பார்வையை வீசினால், இந்தியாவில் பயங்கரவாதத்தை விதைக்க முயன்றால் நாங்கள் அவர்களை விடமாட்டோம்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x