பாலியல் வழக்கில் ‘ஸ்குவிட் கேம்’ நடிகருக்கு சிறை தண்டனை விதிப்பு

பாலியல் வழக்கில் ‘ஸ்குவிட் கேம்’ நடிகருக்கு சிறை தண்டனை விதிப்பு
Updated on
1 min read

சியோல்: ‘ஸ்குவிட் கேம்’ வெப் தொடரில் நடித்த ஓ இயாங் சூ மீது இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு எட்டு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

‘ஸ்குவிட் கேம்’ வெப் தொடர் மூலம் பிரபலமான நடிகர் ஓ இயாங் சூ மீது இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் அவர் குற்றவாளி என்று சுவோன் மாவட்ட நீதிமன்றத்தின் சியோங்னம் கிளை இன்று (மார்ச் 15) தீர்ப்பளித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், ஓ இயாங் சூ-வுக்கு 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர், 40 மணி நேரம் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான தென்கொரிய தொடர் ‘ஸ்குவிட் கேம்’, முதல் சீசன் உலகம் பெரும் முழுவதும் வரவேற்பை பெற்றது. இந்தத் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தென் கொரியாவைச் சேர்ந்த 78 வயது நடிகர் ஓ இயாங் சூ. இத்தொடருக்காக தென் கொரிய நடிகர்களில் முதல் முதலாக சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருதும் இவருக்கு கிடைத்தது.

கடந்த 2017-ம் ஆண்டு இளம்பெண் ஒருவரிடம் தகாத முறையில் தொட்டதாக ஓ இயாங் சூ மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஓ இயாங் சூ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தவறு என்று விடுவிக்கப்பட்டார். அத்துடன் விசாரணையும் முடித்து வைக்கப்பட்டது.

ஆனால், சம்பந்தப்பட்ட பெண் மீண்டும் 2021 டிசம்பர் மாதம் ஓ இயாங் சூ மீது பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரும் கடந்த 2022 ஏப்ரல் மாதம் முடித்து வைக்கப்பட்டது. ஆனால், மீ்ண்டும் அந்த இளம்பெண் புகார் அளித்ததால் ஓ இயாங் சூ மீதான வழக்கு கடந்த 2022ஆம் ஆண்டு முதல் நடந்து வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in