

கராச்சி: ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து பாகிஸ்தான் கராச்சியில் ஷியா அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட போராட்டம் நடத்தினர்.
கராச்சியின் சுல்தானாபாத் பகுதியிலிருந்து மாய் கோலாச்சி நோக்கிச் சென்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு அமெரிக்க தூதரகத்தை நெருங்கினர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். எனினும், தடைகளைத் தாண்டி அமெரிக்க தூதரக வளாகத்தின் முக்கியப் பகுதிக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றபோது, அங்கிருந்த அமெரிக்க வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 12 பேர் உயிரிழந்தனர், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து பாகிஸ்தானில் ஷியா பிரிவினர் அதிகம் வாழும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகங்களில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.