Published : 10 Feb 2024 05:43 PM
Last Updated : 10 Feb 2024 05:43 PM

‘பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் மோசடி’ - விசாரணைக்கு மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொதுத் தேர்தல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

பாகிஸ்தானின் தேசிய அவை மற்றும் மாகாண அவைகளுக்கான தேர்தல் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. காலை 8 மணிக்குத் தொடங்கிய தேர்தல் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதனையடுத்து, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றதால், வாக்குகள் எண்ணும் பணி இன்னும் முடிவுக்கு வரவில்லை. தேசிய அவையின் மொத்தமுள்ள 264 இடங்களில் இன்று மாலை 5 மணி வரை 253 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (பிடிஐ) 92 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சி 71 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்றவர்கள் 36 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அறுதிப் பெரும்பான்மைக்கு 133 இடங்களில் வெற்றி பெற வேண்டும் எனும் நிலையில், எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெரும் நிலையில் இல்லை. இதனால், நவாஸ் ஷெரீப்பும் பிலாவல் பூட்டோவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளார்கள்.

தேர்தல் முடிவுகள் குறித்து சிறையில் இருந்தவாறு கருத்து தெரிவித்த இம்ரான் கான், "நவாஸ் ஷெரீப்பின் லண்டன் திட்டம் பலிக்கவில்லை. பாகிஸ்தானியர்கள் எவரும் அவரை நம்பவில்லை. இப்போது மக்கள் அனைவரும் தங்கள் வாக்கின் வலிமையை உணர்ந்திருப்பார்கள். அதை உணர்ந்த கையோடு தங்கள் வாக்குகளை பாதுகாக்கவும் அவர்கள் முயல வேண்டும். மக்களாகிய நீங்கள் எனது நம்பிக்கையை மெய்ப்பித்து விட்டீர்கள். பிடிஐ கட்சி அழகான வெற்றியைப் பெற்றுள்ளது. அதற்கு உதவிய மக்களுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு, அதன் காரணமாக அவரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட விடாமல் தடுத்து, அவரது கட்சியையும் முடக்கி இந்த தேர்தல் நடத்தப்பட்டிருப்பதால் இது சமமான போட்டி கொண்ட தேர்தல் அல்ல என்ற குற்றச்சாட்டை பிடிஐ முன்வைத்துள்ளது. அதோடு, ராணுவத்தின் ஆதரவோடு நவாஸ் ஷெரீப் தேர்தலை எதிர்கொண்டதாகவும், பல இடங்களில் முறைகேடான முறையில் அக்கட்சி வெற்றி பெற்றதாகவும் பிடிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், இந்தத் தேர்தல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், "இந்த தேர்தலில் சமநிலை போதுமான அளவில் இல்லை. முக்கிய பிரமுகர்கள் சிலர் போட்டியிட முடியாத நிலை இருந்தது. மேலும், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், பேச்சு சுதந்திரம், இணைய சேவை ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் இருந்துள்ளன" என விமர்சித்துள்ளது.

தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை, "ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றுக்கு தவறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினர் மீது தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளது.

இதேபோல், அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் எம்பிக்களான ரோ கண்ணா, இல்தான் ஒமர் ஆகியோர், "இந்தத் தேர்தலில் ராணுவத்தின் தலையீடு இருந்தது. தேர்தல் முடிவுகளில் மோசடிகள் நிகழ்ந்துள்ளன என தெரிவித்துள்ளனர். முறைகேடுகள் மூலம் வெற்றி பெற்றதாக கூறப்படும் புகார்கள் மீது விசாரணை நடத்தப்படாத வரை வெற்றி பெற்றவர்களை அமெரிக்க வெளியுறவுத்துறை அங்கீகரிக்கக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

"பாகிஸ்தான் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறவில்லை. அனைவரையும் உள்ளடக்கியதாக தேர்தல் இல்லை. இது மிகவும் கவலையை ஏற்படுத்தி உள்ளது" என இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x