எரிபொருள் பற்றாக்குறை - 77 விமானங்களின் சேவையை ரத்து செய்தது பாகிஸ்தான்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனம் 77 விமானங்களின் சேவையை ரத்து செய்துள்ளது.

பாகிஸ்தான் சர்வதேச விமானசேவை(Pakistan International Airlines) நிறுவனத்துக்கு எரிபொருள் வழங்கி வரும் பாகிஸ்தான் எண்ணெய் நிறுவனம், தனது விநியோகத்தை நிறுத்தி உள்ளது. பாகிஸ்தான் சர்வதேச விமானசேவை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட எரிபொருளுக்கான தொகை அதிக அளவில் நிலுவையில் இருப்பதால், தொடர்ந்து எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சர்வதேச விமானசேவை நிறுவனம் ரூ. 750 பில்லியன் அளவுக்கு இழப்பைச் சந்தித்துள்ளதே கடன் தொகையை செலுத்த முடியாததற்குக் காரணம் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் 29 உள்நாட்டு விமான சேவை மற்றும் 48 வெளிநாட்டு விமான சேவையை பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனம் நிறுத்தியது. 4 வெளிநாட்டு விமான சேவை மட்டுமே தற்போது வழங்கப்பட்டு வருகிறது. லாகூரில் இருந்து டொரோன்டோ, கோலாலம்பூர், இஸ்லாமாபாத்தில் இருந்து பெய்ஜிங், இஸ்தான்புல் ஆகிய 4 சேவைகள் மட்டுமே தற்போது வழங்கப்பட்டு வருகிறது என பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால், அதனை தனியாருக்கு விற்க அரசு கடந்த மாதம் முடிவெடுத்தது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்நிறுவனத்தை விற்கப் போவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in