

புதுடெல்லி: ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் உள்ள இந்திய மக்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு இடையில் போர் நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் காசாவை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இஸ்ரேலுக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த சூழலில் இஸ்ரேல் உள்ள இந்தியர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப விரும்பினால் அவர்களை பத்திரமாக அழைத்து வருவதற்கான ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
“இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப விரும்பும் நம் மக்களை அழைத்து வருவதற்கு வசதியாக ஆபரேஷன் அஜய் தொடங்கப்படுகிறது. சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வெளிநாட்டில் உள்ள இந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு சார்ந்து நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள், ஐடி ஊழியர்கள், வணிகர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இஸ்ரேலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போருக்கு மத்தியில் ஏர் இந்தியா, இஸ்ரேலுக்கான விமான சேவையை நிறுத்தியுள்ளது. இஸ்ரேலில் இயங்கி வரும் இந்திய தூதரகம், அக்டோபர் 13-ம் தேதி இந்தியாவுக்கு புறப்படும் என எதிர்பார்க்கப்படும் சிறப்பு விமானத்திற்காக பதிவு செய்துள்ள இந்திய மக்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளது.