

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவரை மீட்புக் குழுவினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். படம்: பிடிஐ
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 11 யூதர்கள் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்தார். தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் மோடி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள ஆலயத்தை மறுஅர்ப்பணம் செய்ததைக் குறிக்கும் வகையில், ‘ஹனுக்கா’ திருவிழாவை யூதர்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர். அந்த வகையில், ஒரு வாரம் நடைபெறும் ஹனுக்கா திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான யூதர்கள் கூடியிருந்தனர்.
இந்நிலையில், மாலை 6.40 மணி அளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். போலீஸார் விரைந்து சென்று, மர்ம நபர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு நபர் படுகாயங்களுடன் பிடிபட்டார்.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்: மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 29 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து நியூ சவுத்வேல்ஸ் காவல்துறை உயர் அதிகாரி கிறிஸ் மின்ஸ் கூறும்போது, ‘‘இது பல மாதங்களாக திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல். யூதர்களை குறிவைத்து நடந்த இந்த தாக்குதலில் 2 பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த நவீத் அக்ரம் (24) என்று தெரியவந்துள்ளது. வேறு யாராவது இந்த தாக்குதலில் ஈடுபட்டார்களா என விசாரித்து வருகிறோம்’’ என்றார்.
இதற்கிடையே, கடற்கரையில் உள்ள வாகன நிறுத்தப் பகுதியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். அங்கு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாத தாக்குதலில் உயிர் தப்பிய ஒருவர், ஹனுக்கா திருவிழாவை கொண்டாட குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார். நேற்றைய தாக்குதலில் அவரும் காயமடைந்தார். இந்த தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ்: படுகொலை சம்பவம் குறித்த செய்தி அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். நம் நாட்டில் வெறுப்பு, வன்முறை, தீவிரவாதத்துக்கு இடம் இல்லை. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காணும் பணியில் காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு: ஆஸ்திரேலியாவின் கொள்கைகள் யூத எதிர்ப்புத் தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல உள்ளது. இதை சமாளிக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமருக்கு 3 மாதங்களுக்கு முன்பு கடிதம்எழுதினேன். ஆனால், அவர் செவிசாய்க்கவில்லை. இதனால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த துயரமான நேரத்தில் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய யூத சமூகத்தினருடன் எங்கள் எண்ணங்கள், பிரார்த்தனைகள் உள்ளன.
பிரதமர் மோடி: ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில், யூதர்களின் முதல் நாள் ஹனுக்கா திருவிழாவைக் கொண்டாடிய மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட கொடுமையான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்கள் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் நாங்கள் ஆஸ்திரேலியா மக்களுடன் துணை நிற்கிறோம்.
தீவிரவாதத்தை இந்தியா சகித்துக் கொள்ளாது. தீவிரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான போரில் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தீவிரவாத தாக்குதல் நடந்தபோது, பொதுமக்களில் ஒருவர் தைரியமாக ஓடிச் சென்று ஒரு தீவிரவாதியைப் பிடித்து துப்பாக்கியைப் பறித்தார். எனினும் மற்றொரு தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டதில் அவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அகமது எல் அகமது (43) என்ற பழ வியாபாரி என்று தெரியவந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வலைதளங்களில் பரவி வருகின்றன.