

கோப்புப் படம்
சென்னை: பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜனவரியில் தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின்போது, தமிழக விவசாயிகளுடன் இணைந்து அவர் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. பாஜகவை பொருத்தவரை அதிமுகவுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்பு மேலும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்று அவர்கள் கூறிவருகின்றனர். அந்த வகையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக, பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேநேரம் ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க பாஜக மேலிடம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜனவரியில் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி 13-ம் தேதி தமிழகம் வரும் அவர் 15-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக, தமிழக விவசாயிகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் விவசாயிகளுடன் இணைந்து முதல்முறையாக பிரதமர் மோடி கொண்டாடும் பொங்கல் விழாவாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் இந்த வருகை, கிராமப்புற மக்கள் மற்றும் தமிழகத்தின் கலாச்சார ரீதியான ஒருங்கிணைப்பை இலக்காகக் கொண்ட ஒரு முக்கிய மக்கள் சந்திப்பு முயற்சியாக இருக்கும். இந்த நிகழ்ச்சி, கிராமப்புற மக்களுடனான பாஜகவின் ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தும். தமிழ் கலாச்சாரம், பண்பாட்டு அடையாளத்தின் மீதான பாஜகவின் பிணைப்பை பிரதிபலிக்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது மட்டுமின்றி, ராமேசுவரத்தில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் 4.o நிறைவு விழா, புதுக்கோட்டையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தும் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ யாத்திரை நிறைவு விழா ஆகியவற்றிலும் பிரதமர் பங்கேற்க உள்ளதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் கட்சிகள் இணைவது பொங்கலுக்கு முன்பு உறுதி செய்யப்படும் என்பதால், கூட்டணி அறிவிப்பையும் மோடியின் வருகை உறுதி செய்யும். கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளை ஒரே மேடையில் மோடி அறிமுகப்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது. பிரதமரின் தமிழக பயணத்துக்கான ஏற்பாடுகளில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.