Published : 26 Jun 2023 06:36 AM
Last Updated : 26 Jun 2023 06:36 AM

எகிப்தில் 1,000 ஆண்டுகள் பழமையான மசூதியை பார்வையிட்ட பிரதமர் மோடி

எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமைந்துள்ள 1,000 ஆண்டுகள் பழமையான மசூதியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று பார்வையிட்டார்

கெய்ரோ: எகிப்தில் 1,000 ஆண்டுகள் பழமையான மசூதியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். அங்குள்ள இந்திய வீரர்களின் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார்.

கடந்த 10, 11, 12-ம் நூற்றாண்டுகளில் எகிப்து நாட்டை பாஃதிமித் மன்னர் பரம்பரை ஆட்சி நடத்தி வந்தது. இந்த மன்னர் பரம்பரையின் ஆட்சிக் காலத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து தலைநகர் கெய்ரோவில் அல்-ஹக்கீம் மசூதி கட்டப்பட்டது.

போதிய பராமரிப்பு இன்றி இந்த மசூதி சிதிலமடைந்தது. கடந்த 1970-ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த போரா முஸ்லிம்கள், பெரும் பெருட்செலவில் மசூதியை புனரமைத்தனர். தற்போது வரை இந்திய போரா முஸ்லிம்கள் மசூதியை தங்களது சொந்த செலவில் பராமரித்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மசூதி மீண்டும் புனரமைக்கப்பட்டது.

சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி உலகம் முழுவதும் 100 நாடுகளில் சுமார் 50 லட்சம் போரா முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இந்தியாவின் சூரத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் சுமார் 5 லட்சம் போரா முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

இவர்கள் எகிப்தை ஆண்ட பாஃதிமித் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.இதன் காரணமாகவே கெய்ரோவில் உள்ள அல்-ஹக்கீம் மசூதியை இந்திய போரா முஸ்லிம்கள் மீண்டும் கட்டி எழுப்பி உள்ளனர்.

எகிப்தில் அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நேற்று அல்-ஹக்கீம் மசூதியை பார்வையிட்டார். அதன் கட்டுமான அழகை வியந்து பாராட்டினார். மசூதியை புனரமைத்த இந்திய போரா முஸ்லிம்களிடம் பிரதமர் மோடி நட்புறவுடன் கலந்துரையாடினார். இந்த புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எகிப்தின் பாரம்பரியம், கலாச்சாரத்தை அல்-ஹக்கீம் மசூதி பிரதிபலிக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

நினைவிடத்தில் மரியாதை: முதலாம் உலகப்போரின்போது ஆங்கிலேய படை சார்பில் எகிப்து மற்றும் பாலஸ்தீனத்தில் முகாமிட்ட இந்திய வீரர்கள் துருக்கியின் ஒட்டமான் பேரரசு படைகளுக்கு எதிராகப் போரிட்டு வெற்றியைப் பெற்றுத் தந்தனர். இந்த போரின்போது சுமார் 4,000 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

அவர்களின் நினைவாக எகிப்தின் சூயஸ் கால்வாய் அருகில் போர்க் டெவ்பிக் பகுதியில் நினைவிடம் அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த 1970-ல் எகிப்து-இஸ்ரேல் இடையே நடைபெற்ற போரின்போது இந்த நினைவிடம் அழிக்கப்பட்டது.

அதன்பிறகு எகிப்து தலைநகர் கெய்ரோவில் இந்திய வீரர்கள் உட்பட முதலாம் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கு புதிய நினைவிடம் அமைக்கப்பட்டது. அந்த நினைவிடத்தில் பிரதமர்மோடி நேற்று மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து அவர் ட்விட் டரில் வெளியிட்ட பதிவில்,“முதல் உலகப் போர் நினைவிடத்தில் இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினேன். அவர்களின் உயிர்த் தியாகம், வீரம் என்றென்றும் நினைவில் இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x