

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற அல்லது பிராண்டட் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படும். மருந்துகள், மூலப்பொருட்களின் இறக்குமதியால் தேசிய பாதுகாப்பிற்கு ஏற்படும் அச்சுறுத்தலைக் கையாள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்க அரசுடன் மிகவும் விருப்பமான நாடு என்ற அடிப்படையில் விலை நிர்ணய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, மருந்து உற்பத்தியை அமெரிக்காவிலேயே மேற்கொள்ள ஆலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு பூஜ்ஜியம் சதவீத வரி சலுகை அளிக்கப்படும்.
தற்போது ஆலைகளை அமைத்துக்கொண்டிருந்து, ஆனால் விலை நிர்ணய ஒப்பந்தம் செய்யாத நிறுவனங்களுக்கு 20 சதவீத வரி விதிக்கப்படும். இது நான்கு ஆண்டுகளில் 100 சதவீதமாக உயர்த்தப்படும். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய மருந்து நிறுவனங்கள் உலக அளவில் ‘ஜெனரிக்' எனப்படும் மருந்து உற்பத்தியில் முன்னணியில் உள்ளன.
இவற்றுக்கு தற்போது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், குறுகிய காலத்தில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளுக்கு பாதிப்பு இருக்காது. ஜெனரிக் மருந்து இறக்குமதியையும் ஓராண்டுக்குப் பிறகு ஆய்வு செய்யப்போவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளதால், டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ், சன் பார்மா, பயோகான் போன்ற இந்திய நிறுவனங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.