Published : 04 Jun 2022 08:36 AM
Last Updated : 04 Jun 2022 08:36 AM

போட்டித்தேர்வு தொடர் 17: சிவில் சர்வீஸ் தேர்வின் அடிப்படை தகவல்

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பகுதி. - 17 -

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு-க்குத் தயாராவோருக்கு வாழ்த்துகள்.

இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில்- தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகச் சிலரே இறுதிப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். ஆனால், இறுதிப் பட்டியலில் இடம்பிடித்தவர்கள் வலுவான மற்றும் உறுதியான ஆளுமையைப் பெற்றிருந்தனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் உறுதியான ஆளுமையுடன், வலுவான அடிப்படை அறிவுடன் தயாராகி, அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதே இதன் அறிகுறி.

விண்ணப்பதாரர்கள் பாடத் திட்டம்மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்களின் அடிப்படையில் தயாராக வேண்டும். கடந்த ஆண்டு வினாத்தாள்களைத் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸ் தேர்வு தொடர்பாக வெளியாகும் தேர்வுஅட்டவணை அடிப்படையில், போட்டியாளர் தயாரிப்புக்குத் திட்டமிடலாம்.

இந்த வருடம் சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்கட்டத் தேர்வானது, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஜூன் 5-ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது.

குறைந்தபட்ச கல்வித் தகுதி

இந்த தேர்வுகளுக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களும், தங்களது விண்ணப்பத்துடன், தேவையான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

முயற்சிகளின் எண்ணிக்கை

ஒவ்வொரு விண்ணப்பதாரரும் 6 முயற்சிகளுக்கு அனுமதிக்கப்படுவர். எனினும், தகுதியுடைய எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி மற்றும் மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு முயற்சிகளின் எண்ணிக்கையில் தளர்வு கிடைக்கும். அதாவது, எஸ்.சி.,எஸ்.டி.க்கு வரம்பற்ற முயற்சிகள், ஓபிசி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 9 முயற்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

தேர்வுத் திட்டம்

சிவில் சர்வீஸ் தேர்வு 2 நிலைகளைக் கொண்டுள்ளது. ஒன்று, சிவில்பணிகளுக்கான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு. அடுத்து, எழுத்து மற்றும் நேர்காணல்/ஆளுமைத் தேர்வு.

சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு 2 தாள்களைக் கொண்டிருக்கும். அதிகபட்சம் 400 மதிப்பெண்கள் இருக்கும்.இந்தத் தேர்வு ஒரு ஸ்கிரீனிங் சோதனையாக மட்டுமே செயல்படும்.

சிவில் சர்வீசஸ் பிரதான தேர்வுக்கு அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, ஓராண்டில் நிரப்பப்படும் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கையைவிட சுமார் 12 முதல் 13 மடங்கு அதிகமாக இருக்கும்.

இந்திய வரலாறு, இந்திய தேசியஇயக்கம், இந்திய மற்றும் உலக புவியியல், இந்திய அரசியலமைப்பு, பஞ்சாயத்து ராஜ், பொதுக் கொள்கை, உரிமைகள், பிரச்சினைகள், பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு, நிலையான வளர்ச்சி, வறுமை, சமூகத் துறை முயற்சிகள், சுற்றுச்சூழல், உயிர்பன்முகத்தன்மை மற்றும் காலநிலை மாற்றம் குறித்த சிக்கல்கள், தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவத்தின் தற்போதைய நிகழ்வுகள் குறித்தெல்லாம் கேட்கப்படும்.

அதேபோல, அறிவியல், புரிதல், தொடர்புத் திறன், தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும் பகுப்பாய்வுத் திறன், முடிவெடுத்தல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது, மன உறுதி, அடிப்படைக் கணிதம் குறித்தும் கேட்கப் படும்.

பிரதானத் தேர்வு, விண்ணப்பதாரர்களின் தகவல் மற்றும் நினைவாற்றலின் வரம்பைக் காட்டிலும், அவர்களின் ஒட்டுமொத்த அறிவுசார் பண்புகள் மற்றும் புரிதலின் ஆழத்தை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.

கேள்விகளின் தன்மை மற்றும் தரநிலை, எந்த சிறப்புப் படிப்பும் இல்லாமல், நன்கு படித்த ஒருவர் பதில் அளிக்கும் வகையில் இருக்கும். முரண்பட்ட சமூக, பொருளாதார இலக்குகள், குறிக்கோள்கள், கோரிக்கைகள் பற்றிய பார்வையையும், திறனையும் சோதிக்கும். விண்ணப்பதாரர்கள் பொருத்தமான, அர்த்தமுள்ள மற்றும் சுருக்கமான பதில்களை வழங்க வேண்டும்.

பின்னர், விண்ணப்பதாரர் வாரியத்தால் நேர்காணல் செய்யப்படுவார்.பொதுவான விஷயங்களில் கேள்விகள் கேட்கப்படும். நேர்காணல்/ஆளுமைத் தேர்வு, திறமையான மற்றும் பாரபட்சமற்ற பார்வையாளர்கள் குழுவினரால் மதிப்பீடு செய்யப்படும். இது ஒருவரின் மனத் திறனைக் கண்டறியும் நோக்கம் கொண்டது.

நேர்முகத் தேர்வு

நேர்காணல், ஆளுமைத் தேர்வு,கண்டிப்பான குறுக்கு விசாரணையாக இருக்கு. ஆனால், வேட்பாளரின் மனப் பண்புகளை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் கூடிய உரையாடலாக இருக்கும்.

இது ஒரு சிறப்புப் பரிட்சையாக இருக்காது. பாலின சமநிலையைப் பிரதிபலிக்கும் பணியாளர்களை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கும். பெண்கள் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்களின் பொது அறிவு ஏற்கெனவே எழுதப்பட்ட தாள்கள் மூலம் சோதிக்கப்பட்டது.

ஒருவரின் கல்வி சிறப்புப் பாடங்களில் மட்டுமின்றி, சொந்த மாநிலம் அல்லது நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும், தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளிலும், நவீன சிந்தனை நீரோட்டங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிலும் அறிவார்ந்த ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை

மையப்படுத்தி இருக்கும். நன்கு படித்த இளைஞர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருக்கும்.

(நாளை அடுத்த பகுதி…)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x