Published : 22 May 2022 05:59 AM
Last Updated : 22 May 2022 05:59 AM

போட்டித்தேர்வு தொடர் 14: வளர்ச்சிப் பாதையில் சேவைத் துறை

Service Sector

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சேவைத் துறையின் (Service Sector) பங்களிப்பு 50 சதவீதத்தை கடந்துள்ளதாக 2021-22 பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) கூறுகிறது. ஆண்டுதோறும் சேவைத் துறையின் வளர்ச்சி 10.8 சதவீதமாக உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இதன் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையைவிட சேவைத் துறை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இத்துறையில் அந்நிய நேரடி முதலீடு (FDI) 16.7 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. உலக அளவில் வர்த்தக ரீதியிலான சேவைத்துறையின் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு கடந்த ஆண்டு 4.1 சதவீதமாக இருந்தது. 2021-22 ஆண்டில் 14,000 புதிய தொழில்கள் தொடங்கப்பட்டதன் மூலம், உலக அளவில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதில் (Start-up Ecosystem) 3-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

சமீப ஆண்டுகளில் டிஜிட்டல் வங்கி சேவை, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல், நிதிசார் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவை மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. அந்த வகையில், நாட்டின் 75-வது ஆண்டு விடுதலைப் பெருவிழாவை ஒட்டி, 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகள் நிறுவ வணிகவங்கிகள் முடிவு செய்துள்ளன என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி - இறக்குமதி

2019-20 ஆண்டில் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி (Agricultural Exports) ரூ.2,52,297 கோடியாக இருந்தது. இது நடப்பு விலைகளின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதமாகும். கரோனா பெருந்தொற்றுக்கு இடையில் 2020-21 ஆண்டில் வேளாண் ஏற்றுமதி 22.8 சதவீதம் அதிகரித்து ரூ.3,09,939 கோடியாக இருந்தது. இது ஜிடிபியில் 1.6 சதவீதம்.

கடந்த நிதி ஆண்டில் சாதனை படைத்த ஏற்றுமதி 2022 ஏப்ரல் மாதத்திலும் அபரிமிதமான வளர்ச்சியை தொடர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் சரக்கு ஏற்றுமதி 40 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தைவிட 30 சதவீதம் அதிகம். பெட்ரோலிய பொருட்கள் (127.69%), மின்னணு பொருட்கள் (71.69%), உணவு தானியங்கள் (60.83%), காபி (59.38%), பதப்படுத்தப்பட்ட உணவு வகை (38.82%), தோல் பொருட்கள் (36.68%) ஆகியவற்றின் ஏற்றுமதியில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. சேவை ஏற்றுமதி 27.60 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டு ஏப்ரலைவிட 53 சதவீதம் அதிகம்.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு (Forex Reserve) 2021-22 நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 600 பில்லியன் அமெரிக்க டாலராகவும், 2021 டிச.31-ம் தேதி 633.6 பில்லியன் அமெரிக்க டாலராகவும் உயர்ந்துள்ளது. 2021 நவம்பர் மாத இறுதியில் உலக அளவில் அதிக அந்நியச் செலாவணி கையிருப்பு வைத்துள்ள நாடுகள் பட்டியலில் சீனா, ஜப்பான், சுவிட்சர்லாந்தை அடுத்து, இந்தியா 4-வது இடத்தை பெற்றுள்ளது.

நிதி ஆயோக்கின் (NITI Aayog) நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் (Sustainable Development Goals Index) 2018-19 ஆண்டில் 57 ஆகவும், 2019-20 ஆண்டில் 60 ஆகவும் இருந்த இந்தியாவின் மதிப்பெண் 2020-21 ஆண்டில் 66 ஆக மேம்பட்டுள்ளது. 2010-20 ஆண்டுகளில்தன் வனப் பகுதியை அதிகரிப்பதில் உலக அளவில் 3-வது இடத்தை இந்தியா பிடித்தது.

நிதி மேலாண்மை, நிதிசார் உள்ளீடு

நாட்டின் பணப்புழக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் வங்கிகளில் ரெப்போ வட்டி விகிதம் (Repo Rate) 4 சதவீதமாக பராமரிக்கப்பட்டதும், அரசின் கொள்முதல் சார்ந்த நடவடிக்கைகள், சிறப்பு நீண்டகால ரெப்போ நடவடிக்கைகளுக்கான பணப்புழக்கவிகிதத்தில் ரிசர்வ் வங்கிகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளே இதற்கு காரணம்.

(அடுத்த பகுதிசனிக்கிழமை வரும்)

விவசாயத் துறையில் சாதனைகள்

* கிசான் ரயில்: விவசாயிகள் நலனுக்காக முதல் கிசான் ரயில் சேவை மகாராஷ்டிரா - பிஹார் இடையே 2021 ஆக.7-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

* ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் (Rashtriya Gokul Mission) இயக்கத்தின் கீழ் 90,958 பல்நோக்கு செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர்களை (மைத்ரிகள்) கிராமப்புற இந்தியாவில் பணியமர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கால்நடைகளுக்கான செயற்கை கருவூட்டல் சேவைகள், விவசாயிகளின் வீட்டு வாசலில் கிடைக்கும்.

* தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM) சட்டம் கடந்த 2021-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2021 அக்.1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. NIFTEM மற்றும் IIFPM ஆகியவை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக (INI) அறிவிக்கப்பட்டன.

* நாட்டில் 11.27 சதவீத பெண்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்

* 5 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2016 ஜன.13-ம் தேதி, இந்தியாவில் பயிர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை கையாளும் முறையை வலுப்படுத்துவதற்கான வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்த மத்திய அரசு, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x