

ஸ்வீடன், நோபல் பரிசுகளின் மையம் மட்டுமல்ல. மிக உயர்ந்த கல்வியின் மையமும் ஆகும். - லியோன் பௌச்சர்
நவீனக்கால சீர்திருத்தங் களின் வழியாக ஸ்வீடன் நாட்டு அரசிடம் பள்ளிக் கல்வி முறை 1962இல் ஒப்படைக்கப்பட்டது. அதிலிருந்து கல்வியின் நோக்கம் அங்கு மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டது.
மாணவர்களை ஜனநாயக பண்புடன் கூடிய குடிநபர்களாக உருவாக்குவதற்கான பாடத்திட்டம் வகுக்கப்பட்டது. ஜனநாயக மதிப்பு களும், வரலாற்றுத் தொடர்ச்சியும் கல்வியில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. இது குறித்த விரிவாக அலசுகிறது, லியோன் பௌச்சர் எழுதிய ‘ஸ்வீடன் கல்வியில் பண்டைய மரபும் மாற்றமும் ’ (Tradition and Change in Swedish Education) நூல்.
பள்ளியிலேயே ஆராய்ச்சி: ஸ்வீடனில் 16 வயதுவரை பொதுத்தேர்வு இல்லை. 6-7 வயது வரையில் புத்தகம், நோட்டு புத்தகம் கிடையாது. எதையும் மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. விளையாட்டு, இசை, தாய்மொழியில் அமைந்த பாடல்கள் கற்பிக்கப்படுகின்றன. ‘ஸ்கூல்வேர்கெட்’ (skolverket) எனும் ஸ்வீடன் தேசிய கல்விக் குழு ஒவ்வொரு நகராட்சிக்கான பாடத்திட்டத்தையும் பரிந்துரைக்கிறது. சர்வதேச, தேசிய பாடப்பொருளோடு அது 70% உடன்பட வேண்டும்.
அவர்களது நாடாளுமன்ற மான ‘ரிக்ஸ்டாக்’ ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை கல்விக்கான இலக்குகளை அறிவிக்கிறது. மொத்தம் 290 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகள்தான் பள்ளிகளைக் கட்டணம் இன்றி நடத்துகின்றன. ஒவ்வொரு குழந்தையும் கட்டாயம் பள்ளிக்குச் செல்வதை நகராட்சி நிர்வாகம் உறுதிப்படுத்துகிறது. இவற்றைத் தவிர ஃபிஷ்கோலார் எனும் அரசு உதவித்தொகையுடன் செயல்படும் பள்ளிகளும் உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான பள்ளிகள் இவை.
இவற்றிலும் கட்டணம் வசூலிக்கப் படுவதில்லை. ஆய்வுக்கான செயல்திட்டங்கள், பயிற்சிகள், தொழில்துறை வழி காட்டுதல் உள்ளடக்கிய ஆராய்ச்சி கல்வி 6ஆம் வகுப்பிலேயே அறிமுகம் செய்யப்படுகிறது. பாலின, சமூக பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான அணுகுமுறையைக் கல்விச் சட்டம் உறுதிசெய்கிறது.
உயரிய ஊதியம்: ஸ்வீடன் நாட்டில் ஆசிரியர் பணி என்பது உயர்ந்தபட்ச ஊதியம் பெறுகிற பணிகளில் ஒன்று. எனவே, ஆசிரியர்கள் தெரிவுசெய்யப்படும் முறை மிகக் கடினமானது. முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியராக முடியும். பணியில் சேர்ந்த பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்வியில் சிறந்து விளங்கும் ஃபின்லாந்து, டென்மார்க், ஜப்பான் முதலான அயல்நாடுகளுக்குக் கல்வி பயணம் மேற்கொள்ள அரசாங்கம் ஆசிரியர்களுக்குச் செலவுசெய்கிறது.
இப்படிப் பணிக் காலத்தில் குறைந்த பட்சம் மூன்று முறை ஓர் ஆசிரியர் அயல்நாடுகளுக்குக் கல்வி பயணம் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப் படுகிறது. வருடாந்திர நிதிநிலை அறிக்கையில் ஸ்வீடன் அரசுக் கல்விக்கு என்று ஒட்டுமொத்த உற்பத்தியில் 7- 8% சதவீதம் ஒதுக்குகிறது. போட்டிப் போட்டுக்கொண்டு நகராட்சிகள் பள்ளிகளை நடத்துவதால் உயர்தர நூலகங்கள், ஏனைய கல்வி வசதிகள், கல்விக்கருவிகள் என அங்கு கிடைக்காத விஷயமே இல்லை.
தொழில், வேலைச் சந்தையுடன் கல்விக்கான வலுவான இணைப்பு இங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகின்றன. சில பெரிய தொழில் நிறுவனங்களே கல்லூரிகளைத் தத்து எடுத்துக் கொள்வதும் நடக்கிறது. பெரும்பாலும் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே அனைவருக்கும் வேலை உறுதிசெய்யப்படுகிறது என்பது போன்ற நூற்றுக்கணக்கான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; தொடர்புக்கு: eranatarasan@yahoo.com