

கற்றலை கப்பலோடு ஒப்பிடுங்கள். ஒவ்வொரு புதிய பாடப்பிரிவு வரும்போது கப்பலை நிலைநிறுத்த உதவும் நங்கூரம்போல இருக்கக்கூடிய கற்றல் முறையே வெற்றிபெறும். - ஜான் டீ பிரான்ஸ்போர்ட்
இன்றைய கற்றல் கற்பித்தல் கோட்பாடுகளில் முதன்மையானது ‘நிலைநிறுத்தப்பட்ட கூட்டுக் கற்றல்’ எனும் கோட்பாடு (Anchored Collabo rative Instruction Theory). இதை வழங்கியவர் ஜான் டீ பிரான்ஸ்போர்ட். ‘ஜஸ்பர் தொடரை உருவாக்குதல்’ எனும் கல்விச் செயல்திட்டத்தை இவர் 2022இல் அறிமுகப்படுத்தினார். அவர் மறைவுக்குப் பிறகு அவரது சிந்தனையை விரிவாக விளக்கும் ‘The Jasper Project’ நூல் வெளியிடப்பட்டது.
முதலில் பெயரை மாற்றுங்கள்: வாண்டர்பில்ட் பல்கலைக்கழக அறிவாற்றல், தொழில்நுட்ப குழுவட அமெரிக்காவில் உள்ள நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், ஆயிரக் கணக்கான மாணவர்களிடம் ஜஸ்பர் கல்வி சோதனையை நிகழ்த்தியது. 5ஆம் வகுப்பு, அதற்கு மேற்பட்ட மாணவர்களின் கணிதச் சிந்தனையை மேம்படுத்துவதற்கான வழி அதில் தேடப்பட்டது.
அறிவியல், வரலாறு, சமூக ஆய்வுகள் போன்ற பிற துறைகளுடன் எத்தகைய தொடர்பு களை ஏற்படுத்த வேண்டிவரும் என்கிற நோக்கில் இந்த ஆய்வு வடிவமைக்கப்பட்டது.
உதாரணமாக, கணிதம் எவ்வாறு மருத்துவம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), பொறியியல் துறை, பங்குச்சந்தைப் பொருளாதாரம், வணிகம் போன்ற பல்துறைகளுடன் தொடர்புடையது என்பதைக் குழந்தைகளுக்குப் புரியவைக்கக் கணிதப் பாடத்தின் பெயரையே தரவு, பயன்பாட்டுக் கணிதம் (Data and Applied Maths) என்று மாற்ற வேண்டும்.
அறிவியல் பாடம் எனும் பெயரே மாற்றப்பட வேண்டும் என்கிறது இந்த ஆய்வு. அறிவியல் தொழில்நுட்பம், புவி பாதுகாப்பு இயல் என்று ஐந்தாம் வகுப்பில் இருந்து பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
மொழிப் பாடத்தைப் பொறுத்த வரை, ஒரு குறிப்பிட்ட வயதுவரை தாய்மொழி, இரண்டாவது மொழி (ஆங்கிலம்) என்று இருக்கலாம். பிறகு 6ஆம் வகுப்பிலிருந்து ஒப்பீட்டு மொழியியல் (Comparative Linguistics) எனப் புழக்கத்தில் உள்ள இணையப் பயன்பாட்டு மொழிப்பாடம் இருந்தால் அதுவே 21ஆம் நூற்றாண்டின் கல்வி என்கிறார் நூலாசிரியர்.
கூட்டுக் கற்றல்: கற்றல் என்பது தனிமைப்படுத்தப்பட்ட பாடப்பொருள் அல்ல. யதார்த்தமான சூழலில் அனை வரும் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்க்கும் ஒன்றாக மாற்றப்பட வேண்டும்.
மாணவர்கள் தங்கள் சொந்த அறிவை மீட்டெடுத்து பகுப்பாய்வு செய்வதற்கு இணையத்தில், பன்னாட்டு, உள்நாட்டு, உள்ளூர், சக மாணவர்களுடன் திறந்த வெளி இணையக் கலந்துரையாடல் மூலம் புதிய கற்றல் உத்திகளை அடைய வேண்டும்.
இந்தக் கூட்டு கற்றல் முறையில் நங்கூரம் இட்டு மையப்படுத்தப்பட்ட கற்றல் பொருள் சார்ந்து உலக அளவிலான நிபுணர்கள் இணையத்தின் வழியே இந்த வகுப்பறைகளில் தோன்றி நேரடியாகக் கற்றலில் உதவ வேண்டும். இது அனை வருக்குமான முன்னேற்றத்தை நோக்கி மனித சிந்தனையை எடுத்துச்செல்லும்.
உதாரணமாக, தொகை நுண்கணிதம் (Integral Calculus) வகுப்பறையில் ராக்கெட் விஞ்ஞானி இணையத்தின் வழியே தோன்றி, “இன்று நீங்கள் கற்கும் இதை வைத்துத்தான் விண்வெளியில் நாங்கள் வானூர்திகளைச் செலுத்துகிறோம்” என்று பேச வைக்கலாமே என்பது போன்ற பல அற்புதங்களை 21ஆம் நூற்றாண்டு கல்வி குறித்த இந்தப் புத்தகம் முன்மொழிகிறது.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com