எலான் மஸ்க் மகனுக்கு பெயர் சூட்ட வைத்த ஆசிரியர் | வகுப்பறை புதிது 49

எலான் மஸ்க் மகனுக்கு பெயர் சூட்ட வைத்த ஆசிரியர் | வகுப்பறை புதிது 49
Updated on
2 min read

நீங்கள் எந்தச் சூழலிலும் எந்த நாட்டிலும் ஆசிரியராக இருங்கள். அங்கிருக்கும் கல்வி முறையின் அவலங்களையும் மீறி எதிர்கால மாமனிதர்களைப் படைக்கும் வகுப்பறையை உங்களால் உருவாக்க முடியும். - முனைவர் டயானா முல்லட்.

ஒவ்வொரு முறையும் நோபல் பரிசு பட்டியல் அறிவிக்கப்படும்போது, அதில் இந்தியர்களின் பெயர்கள் இருக்காதா என்கிற ஏக்கத்தோடு கவனிக்கிறோம். நோபல் அறிஞர்களை உருவாக்கு வதைப் பேசும், ‘வகுப்பறையில் படைப்பாக்கத்தை வளர்த்தெடுத்தல்’ (Developing Creativity in the Classroom) புத்தகம் இந்த விவகாரத்தில் புதிய வெளிச்சம் பாய்ச்சுக்கிறது.

‘எதிர்கால நோபல் அறிஞர்கள் உங்கள் வகுப்பில்தான் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்’ - இப்படி ஆசிரியர் களுக்கு உற்சாகமூட்டும் தலைப்புடன் முதல் அத்தியாயம் தொடங்குகிறது.

நோபல் பரிசு சமர்ப்பணம்: நோபல் அறிஞர்களை உருவாக் கிய 20க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்களைப் பற்றி இந்தப் புத்தகம் பேசுகிறது. ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் லாஸ்லோ ராட்ஸ் (Laszlo Ratz) நோபல் பரிசு பெற்ற யூஜின் விக்னர், கணினி, கணித மேதை ஜான் நியூமேன் உள்படப் பலருக்குப் பாடம் நடத்தியவர்.

இந்த ஆசிரியருக்கே தமது நோபல் பரிசை இரண்டு நோபல் அறிஞர்களும் சமர்ப்பித்தனர். இவருடைய வகுப்பறையின் சிறப்பு, ஒரே பாடத்தலைப்பைக் கரும்பலகையில் இருந்து கலந்துரையாடல், படைப்பாக்கம் என்று ஆறு விதங்களில் மாணவர்களிடம் எடுத்துச் செல்வது.

அதேபோல நோபல் அறிஞர் ரிச்சர்ட் ஃபைன்மனின் பள்ளி ஆசிரியர் அப்ராம் பெய்டர் (Abram Bader) மாணவர்களை அறிவியலாளராக உணரவைப்பாராம். ஆசிரியர் அப்ராம் தனது கால்குலஸ் புத்தகத்தை ஏழாம் வகுப்பு படித்த ரிச்சர்ட் ஃபைன்மனிடம் கொடுத்து அதிலுள்ள இயற்பியல் அம்சங்களைப் பட்டியலிட்டு வருமாறு விடுமுறை வேலை கொடுத்திருக்கிறார்.

அதுவே தன்னை அறிவியலாளராக மாற்றியதாக ரிச்சர்ட் ஃபைன்மன் பின்னாளில் நினைவு கூர்ந்தார். இதேபோன்று வாரம் ஒருமுறை மாணவர் களைத் தலைசிறந்த ஆய்வுக்கூடங்கள், அருங்காட்சியகங்களுக்கு அழைத்துச் சென்ற அல்ஃப்ரன் பெண்டர் (Alfren Bender), ஆய்வு அறிக்கை தயாரிக்க, ஆய்வுக் கட்டுரை எழுத ஒன்பதாம் வகுப்பிலேயே சொல்லிக்கொடுத்த சாமுவேல் கிரஃப் (Samuel Graf) உள்ளிட்ட மகத்தான ஆசிரியர்களின் அரிய பண்புகளை நோபல் அறிஞர்களின் நினைவலை யாக இந்தப் புத்தகம் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

இந்திய ஆசான்: அடுத்து இடம்பெறும் மாமனிதர் நம்முடைய இந்தியாவில் பிறந்த நோபல் அறிஞர் சுப்ரமணியம் சந்திரசேகர். உலகின் தலைசிறந்த ஆசிரியர்களில் ஒருவர் என்று இந்தப் புத்தகம் அவரைப் பற்றிப் பேசுகிறது. கார்ல் சாகன், எலான் மஸ்க் உள்படப் பல அறிஞர்கள் அவருடைய வகுப்பறைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கி றார்கள். அவர் பள்ளிக்கூட ஆசிரியர் அல்ல.

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆனவர். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தன்னுடைய மகனுக்கு அவர் ஞாபகமாக ‘சேகர்’ என்று பெயர் வைத்திருக்கிறார். சுங் டாவோ லி, செங் மிங் யாங் உள்பட நோபல் அறிஞர்களை உருவாக்கிய மாமனிதர் சுப்ரமணியம் சந்திரசேகர், தன் மாணவர்கள் எல்லாம் நோபல் பெற்ற பிறகு இறுதியாகத் தானும் நோபல் பரிசு பெற்றார்.

அவருடைய வகுப்பறைகள் ஆசிரியரின் கேள்விகளால் ஆனவை அல்ல, மாணவர்களின் கேள்விகளால் ஆனவ என சுட்டிக்காட்டப்படுகிறது. அறிவியல் அறிஞர்கள் என்றில்லை, பொருளாதார நோபல் பரிசாளர் ஜான் நேஷ், இலக்கிய நோபல் பரிசாளர் நைபால் உள்படப் பலரது பள்ளிக்கூட ஆசிரியர்கள் எப்படியெல்லாம் வகுப்பறைகளைக் கொண்டிருந்தார்கள் என்பதை இந்நூல் விவரிக்கிறது. நோபல் அறிஞர்கள் உருவாவது பள்ளிக்கூட வகுப்பறைகளில்தான் என்பது எவ்வளவு பெரிய உண்மை.

- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com

எலான் மஸ்க் மகனுக்கு பெயர் சூட்ட வைத்த ஆசிரியர் | வகுப்பறை புதிது 49
உள்ளூர் முதல் உலக பாடத்திட்டம் வரை | வகுப்பறை புதிது 48

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in