

அறிவு, ஆளுமை, ஆற்றல் என அனைத்திலும் மெருகேற வேண்டிய பதின் பருவத்தில் மாணவர்கள் மனம்போன போக்கில் போலியான ஆளுமைகளிடம் கட்டுண்டு கிடக்கின்றனர் என்பதைச் சமீபத்திய சமூக நகர்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. சமூகத்தில் சினிமா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த ஊடகம்.
பொழுதுபோக்கு என்றில்லை வரலாறு, அறிவியல் சார்ந்த சிக்கலான கருத்துகளைக்கூட உயிரோட்டமான காட்சி வடிவில் உருவாக்கினால், மாணவர்களின் மனத்தில் பதியவைத்து எதிர்பார்க்கும் தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது.
அதுவே உணர்ச்சிபூர்வமான கதைகளோடு ஒலியையும், ஒளியையும் இணைத்து கட்டமைக்கப்படும் திரைப்படங்கள் உண்மைக்கும் பொய் மைக்கும் இயற்கைக்கும் செயற்கைக்கும் இடையேயான வேறுபாட்டை பிரித்தறிய இயலாத அளவு அறி வையும் மனத்தையும் மயக்கத்தில் ஆழ்த்தி விடுகின்றன.
விமர்சனப் பார்வை: இதன் தாக்கத்தால் திரைப்படங்களில் நடிக்கும் கதாபாத்திரங்களை நடிகர்களாகப் பார்க்க ரசிகர்கள் தவறுகின்றனர். திரையில் தெரிவது தான் அந்நடிகர்களின் உண்மை பிம்பம் என நம்பி ஒருவித மந்தைப் போக்கினுள் சிக்கிக்கொள்கின்றனர்.
இதன்மூலம் இவர்களது எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும் அபாயம் உள்ளது. பள்ளி, கல்லூரி மாண வர்களில் பலர் இன்றைக்குக் கல்வியின் மீது நாட்டமற்று, உண்மைக்கு மாறான சமூக மதிப்பீடுகளை அடைய முயலும் மனநிலையில் வளர்கின்றனர்.
இந்நிலை மாற திரைப்படங்கள் பற்றிய அவர்களது புரிதலை நாம் பக்குவப்படுத்தியாக வேண்டும். நடிகர்களின் நடிப்பாற்றலையும் திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களையும், அதன்மூலம் சொல்லப்படும் கருத்துகளையும் நடு நிலைமையோடு விமர்சித்து மகிழும் சரியான மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.
ஆசிரியர்களுக்குப் புரிதல்: போலித்தனங்களில் இருந்து மாணவர்களை மீட்டெடுத்து சரியான பாதையை நோக்கி அவர்களை அழைத்துசெல்ல கல்வி நிலையம்தான் சரியான இடம். இதற்கு முதலில் மாண வர்களை வழிநடத்தும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு சினிமா பற்றிய புரிதலையும் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றிய அறிதலையும் பயிற்றுவிக்க வேண்டும். பணியிடைப் பயிற்சிகளின் மூலம் இதைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அதனைத் தொடர்ந்து மாணாக்கர்களுக்குள் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளின் வழியே நல்லதொரு மாற்றத்தை நடைமுறைபடுத்தலாம். மாணவ பருவத்தினரின் மன நிலைக்கு ஏற்ற விழிப்புணர்வு ஆவணப்படங் களைப் பள்ளிகளில் திரையிடலாம். அவ்வப்போது மாணவர்க ளிடையே திரைப்படங்கள் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தும் வகையி லான திறன் போட்டிகள் நடத்தலாம்.
அவர்களைக் கொண்டே திரைப்பட மோகத்தைக் கைவிட வைக்கும் வாசகங்களை எழுதி, பதாகைகளை ஏந்தி, உரக்க உரைத்து ஊர்வலம் செல்ல வைக்கலாம். இத்தகைய நிகழ்வுகள் மாணவர்களின் மனத்தில் ஆழப்பதியும் தன்மையுடையவை. ஆரம்பக் கல்விப் பாடத்திட்டத்தி லிருந்தே மாணவர்களின் மன வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களது பாடப் புத்தகங்களிலும் திரைப்படங்களைப் பற்றின புரிதலை ஏற்படுத்தும் வகையில் பாடப்பகுதி களைச் சேர்க்கலாம்.
கற்பித்தலின்போது சமூக நலத்தின் மீது எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும் காட்சிகளை காண்பித்து, அக்காட்சியைப் பற்றின விமர்சனத் தையும் அக்காட்சிகளில் இருக்கும் நடிப்புத்திறன், தொழில்நுட்பங்களைப் பற்றியும் விவாதித்து, மாணவர்களை விழிப்படைய வைக்க முடியும்.
இவ்வாறான செயல்பாடுகளைக் அதற்கான வல்லுநர் குழுக்களை அமைத்துத் திட்டமிட்டு செயல் படுத்தினால் மட்டுமே, இத்தகைய மாயையிலிருந்து இளைஞர்களை விடுவிக்க இயலும். இவ்வாறான செயல்முறைகளைக் கல்வித் துறையும் அதனோடு தொடர் புடைய அரசுத் துறைகளும் இணைந்து செயல்படுத்தினால் இளைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தை நல்வழிப் படுத்த முடியும்.
- கட்டுரையாளர்: ஆசிரியர், உவாக்கர் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி மாவட்டம்; emmimajansy@gmail.com